எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் ஆரம்பமாகவுள்ள 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களுக்கு 22.5 மில்லியன் ரூபா நிதியை வழங்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வாவுக்கும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கும் இடையில் நேற்று (02) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது, தேசிய விளையாட்டு நிதியத்தின் ஊடாக மேலும் பல விளையாட்டு சங்கங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் மேலும் உறுதியளித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நமது நாட்டில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த நிதியானது பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.