இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணையவுள்ளார்.
ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஐந்து தடவைகள் சம்பியனான இலங்கை, கடைசியாக 2018இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் என நம்பப்படுகிறது.
இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைவியாக மத்திய நிலை வீராங்கனை கயஞ்சலி அமரவன்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதவித் தலைவியாக பக்கநிலை எதிர்த்தாடும் வீராங்கனை துலங்கி வன்னித்திலக்க செயற்படவுள்ளார்.
அனுபவசாலிகளும் சிரேஷ்ட வீராங்கனைகளுமான தர்ஜினி சிவிலங்கம், முன்னாள் அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, கயனி திசாநாயக்க, ஹசித்தா மெண்டிஸ், செமினி அல்விஸ் ஆகியோருடன் தீப்பிகா அபயகோன், ஹாஷினி டி சில்வா, மல்மி ஹெட்டியாராச்சி, இதுஷா ஜனனி, ரஷ்மி திவ்யாஞ்சலி ஆகியோரும் வலைபந்தாட்டக் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் (ஆசிய கிண்ணம்) போட்டிகள் சிங்கப்பூரில் செப்டெம்பர் 3ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
11 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டி நான்கு குழுக்களில் லீக் முறையில் நடத்தப்படும்.