செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இதுவும் நடக்கலாம் | சிறுகதை | விமல் பரம் 

இதுவும் நடக்கலாம் | சிறுகதை | விமல் பரம் 

15 minutes read

ஞானம் சஞ்சிகையால் 2021 ல் நடாத்தப்பட்ட “அமரர் செம்பியன் செல்வன்” ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு ஆடி மாத ஞானம் சஞ்சிகையில் இக்கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை லீவு நாள்.

பள்ளிக்கூடம் இல்லாததால் அம்மா என்னை எழுப்பவில்லை. நான் கண் விழிக்கும் போது ஒன்பது மணியாகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம். ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம் கண்ணில் பட்டு விழிப்பு வந்து விட்டது. உடனே எழும்ப மனமின்றி போர்வைக்குள் சுருண்டிருந்தேன்.

வெளியே அம்மா அப்பாவுடன் கதைக்கும் சத்தம் பெரிதாகக் கேட்டது.

“நீங்கள் மட்டும்தான் அவருக்குப் பிள்ளையே… இனிப் போய் அண்ணாவோட இருக்கட்டும். கலியாணம் செய்து வந்த காலத்தில இருந்து நான்தானே பாக்கிறன்”

“பொய் சொல்லாத. அம்மா இருந்தவரைக்கும் வீட்டுவேலைகளையும் செய்து எங்களையும் கவனிச்சா. அவா போன பிறகு இந்த ஒரு வருசமாய்தான் நீ சமைக்கிறாய் அப்பாவைப் பாக்கிறாய் அதுவும் வேண்டா வெறுப்பாய். இப்ப ஏன் கத்திறாய் அவருக்கு கேட்கப் போகுது” கோபத்தோடு சொன்னார் அப்பா.

கொஞ்ச நாளாய் தாத்தாவைப் பெரியப்பா வீட்டுக்கு அனுப்புவது பற்றி கதைக்கிறார்கள். அப்பம்மா போனதையே என்னால் தாங்க முடியவில்லை. தாத்தாவும் போனால் என்னோடு கதைக்க கதை சொல்ல யார் இருக்கிறார்கள். எனக்குத் தாத்தா வேணும். நேற்று இரவும் அம்மா அவரை அனுப்பவேணும் என்று சொல்ல அப்பா அப்போதும் கோபப்பட்டார்.

“இது அம்மாவின்ர வீடு. அம்மாவின்ர நினைவோட இங்க கோணாவில்ல இருக்கத்தான் விரும்புவார். அவரை எப்பிடி அனுப்புறது வேண்டாம்”

அப்பா சொன்னதைக் கேட்க சந்தோஷமாய் இருந்தது.

“அம்மா, தாத்தாவை அனுப்ப வேண்டாம். உங்களுக்கு ஏன் தாத்தாவைப் பிடிக்கேல”

“பத்து வயசில கேள்வி கேட்க வந்திட்டாய். போடா போய்ப் படி” அடி விழுந்தது. அடித்தாலும் அழுது அடம் பிடித்தாவது தாத்தாவைப் போகவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

விடிய எழுந்ததும் திரும்பவும் தாத்தாவை அனுப்பச் சொல்லுறாவே… கோபமாக இருக்கும் இந்த நேரத்தில் எழுந்து வெளியே போகலாமா வேண்டாமா என்று நினைக்கும் போது அறைக்குள் வேகமாக வந்தாள் அம்மா.

“வெயில் சுள்ளெண்டு எரிக்குது. இன்னும் என்னடா படுக்கை” முதுகில் அடித்து எழுப்பினாள்.

“உன்ர கோவத்தை அவனிட்ட ஏன் காட்டிறாய்” அப்பா கேட்க திரும்பவும் கை ஓங்கினாள்.

இனி படுத்திருந்தால் ஆபத்து. மறுபக்கம் பாய்ந்து இறங்கி வெளியே ஓடினேன். முகம் கழுவி சாப்பிட்டு விட்டுத் தாத்தாவைத் தேடிப் போனேன்.

முன்பக்க வேலியின் ஒரு பக்கம் பிரிந்திருந்ததை இழுத்து கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தார். எப்ப பார்த்தாலும் ஏதாவது செய்து கொண்டிருப்பார். பகல் நேரங்களில் அவரைத் தேடித்தான் பிடிக்கவேணும். என்னைப் பார்த்ததும்

“வாடா என்ர செல்லக்குட்டி. இவ்வளவு நேரமும் தூங்கினாயா”

என்றவரின் முகத்தில் வழக்கமாய் இருக்கும் சிரிப்பில்லை. அம்மா சொன்னது கேட்டிருக்குமோ பாவம் தாத்தா.

“ஏன் தாத்தா உங்களை அம்மா போகச் சொல்லுறா”

“எல்லாம் என்ர விதி. சீமாட்டி போனதோட என்ர சந்தோஷமும் போயிட்டுது. இனி எப்பிடி எல்லாம் அலையப் போறனோ… கஷ்டப்படப் போறனோ ஆருக்குத் தெரியும்“

தாத்தாவின் முணுமுணுப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்பம்மா போன பிறகுதான் அடிக்கடி சண்டை வருகிறது என்று புரிந்தது.

“அப்பம்மா எங்களை விட்டிட்டு ஏன் தாத்தா போனவா. நீங்கள் ஏன் விட்டனீங்கள்”

கேட்டதற்குப் பதில் சொல்லாது பெருமூச்சு விட்டார் தாத்தா.

அப்பம்மாவைத் தேடி எவ்வளவு நாட்கள் அழுதிருக்கிறேன்.

“சாமிட்ட போனவையளை நினைச்சு அழக்கூடாது” அப்பா சொன்னார்.

“அப்பம்மா மாதிரி எனக்கு கதை சொல்லுங்கோம்மா” ஆர்வத்தோடு அம்மாவிடம் கேட்டேன்.

“சின்னப்பிள்ளை மாதிரி கதை கேட்காத. புத்தகங்களை எடுத்து படி” என்றாள்

சோறும் பருப்பும் சாப்பிட்ட என்னை எல்லா மரக்கறிகளும் சாப்பிட்டு பழக வேணும் என்று குழைத்து கதை சொல்லி சாப்பிட பழக்கியது அப்பம்மாதான்.

“செல்லத்துக்கு என்ன கதை வேணும் ராஜா ராணிக் கதை சொல்லட்டுமா”

என் விருப்பத்தைக் கேட்டபடி கதை சொல்லத் தொடங்குவா.

“ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம். ஒருநாள் ராஜா குதிரையில ஏறி ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தாராம். குதிரை டக்… டக்… டக்கென்று ராஜாவை சுமந்து கொண்டு நடந்து வந்ததாம். எப்படி வந்தது” என்னிடம் கேள்வி கேட்பா. நானும் உற்சாகமாக

“டக்… டக்… டக்கென்று வந்ததாம்” என்று இழுத்துச் சொல்லுவேன்.

“ராஜாவைப் பார்த்த மக்கள் சந்தோஷத்தில் கைகளை பட்… பட் என்று தட்டி வரவேற்றார்கள். எப்பிடி வரவேற்றார்கள்” கேள்வி கேட்டு முடிவதற்கிடையில் என் கைகளை பட்… பட் என்று தட்டிக் காட்டுவேன். நான் சாப்பிட்டு முடியும் வரை கதை நீளும்.

“எப்பிடி அப்பம்மா நான் சாப்பிட்டு முடிய கதையும் முடிஞ்சுது” அதிசயமாய் கேட்பேன்.

“கதை சொல்லுறது உன்ர அப்பம்மாவாச்சே. நீ கொஞ்சமாய் சாப்பிட்டால் சின்னக்கதை. நிறைய சாப்பிட்டால் பெரியகதை. அதுக்கு ஏற்றதாய் கதையை நீட்டி முழக்க வேண்டியதுதானே” தாத்தா சொல்லிச் சிரிப்பார்.

கதை கேட்ட சந்தோஷத்தில் எனக்கும் சிரிப்பு வரும்.

அப்பம்மாவுக்கு நிறையக் கதைகள் தெரியும். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் கதைகள் சொல்லுவா. அப்பம்மா போனபிறகு தாத்தாவோ அம்மாவோ என்னிடம் கேள்வி கேட்டு கதைகள் சொல்வதில்லை.

“வந்த நேரத்தில இருந்து என்னடா யோசிக்கிறாய். வேலை முடிஞ்சுது வா போவம்”

தோளில் தட்டிக் கேட்டார் தாத்தா.

“அப்பம்மாவை நினைச்சன் தாத்தா” அவரின் கையைப் பிடித்தபடி வீட்டுக்குள் வந்தேன்.

“எங்கடா போனாய் சமையல் முடிஞ்சுது. இண்டைக்கு சனிக்கிழமை முழுகிட்டு வந்து சாப்பிடலாம் வா” அம்மா கூப்பிட்டாள்.

“முழுக வேண்டாம் பசிக்குது சாப்பிடப்போறனம்மா”

“சொல்லுறது ஒண்டும் கேக்கிறதில்லை வாடா” கையைப் பிடித்து இழுத்துப் போனாள்.

முழுகிவிட்டு வர கடைக்குப் போன அப்பாவும் வந்து விட்டார். எல்லோரும் சாப்பிடத் தொடங்க இரண்டு மணியாகி விட்டது.

“அப்பாவும் இப்பவே சாப்பிடுறார். சுடச்சுட சாப்பிடுறவர் இவ்வளவு நேரமும் ஏன் சாப்பிடாமல் இருந்தவர்” அப்பாவின் கேள்விக்கு

“எனக்கென்ன பத்துக் கை இருக்கே. ஒவ்வொண்டாய் செய்ய நேரம் போட்டுது” வெடுக்கென்று சொன்னாள் அம்மா.

நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாத்தாவின் தட்டில் கை வைத்துப் பார்த்தேன் சுடவில்லை. அப்பம்மா இருந்தபோது அவருக்கு கொடுக்கும் சாப்பாட்டில் ஆவி பறக்கும்.

ஒருநாள் தாத்தாவின் தட்டில் பொரியலைப் பார்த்து அதை கையில் எடுக்க சுட்டு விட்டது.

“ஐயோ தாத்தா. கையில சுட்டுப் போட்டுது. நீங்கள் எப்பிடி சாப்பிடுறீங்கள்”

“சுடச் சுடச் சாப்பிட்டால்தானடா நல்லாயிருக்கும் எனக்கும் பிடிக்கும். அப்பம்மா அடுப்பால இறக்கின கையோட கொண்டு வந்து தந்திடுவா”

அன்று சொன்னது நினைவுக்கு வந்தது. இன்று ஒன்றுமே சொல்லாமல் சாப்பிடும் தாத்தாவைப் பார்த்தேன். அம்மாவுக்கு எல்லாம் தெரியும். சமைத்த உடனே கொடுத்திருக்கலாம். வர வர அம்மா தாத்தாவை கவனிக்கிறதேயில்லை. என்னிடம் உனக்கு என்ன வேணும் என்று கேட்டு விதம் விதமாய் செய்து தரும் அம்மா ஏன் தாத்தாவுக்கு விருப்பமானதைச் செய்வதில்லை தாத்தா போனால் நான் என்ன செய்வேன். இவர்களுக்கு கரைச்சல் குடுக்காமல் தாத்தாவோடு இருந்து விளையாடுகிறேன். அவரிடம் கேட்டுப் படிக்கிறேன். இது ஏன் அம்மாவுக்குப் புரியவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும் தாத்தா அப்பாவிடம் வந்தார்.

“மூத்தவனோட போய் இருங்கோ எண்டு சொல்லுறீங்கள். நான் எந்த முகத்தோட போய் இருப்பன். இந்தவீடு தனக்குத்தான் எண்டு நெடுகவும் சொல்லுவான். நானும் அம்மாவும் உன்னோட இருக்கிறதால உனக்குத்தான் குடுக்கவேணும் எண்டு அம்மா உன்ர பெயரில எழுதிப் போட்டா. அந்தக் கோவத்தில ஆறு வருசம் கதைக்காமல் இருந்தவன் அம்மாவுக்கு வருத்தம் வந்த பிறகு பாக்க வந்தாலும் கோவம் குறையாமல் மனம் நோகப் பேசினானேடா கடைசிக்காலம் வரைக்கும் சொந்த ஊரில இருக்கவேணும் எண்டுதானேடா ஆசைப்பட்டம். அம்மா போனதும் என்னை அவனிட்ட போகச்சொல்லுறீங்களே” கண்கலங்க கேட்டார் தாத்தா.

அப்பா நிமிர்ந்து தாத்தாவுக்கு பதில் சொல்ல முயன்றபோது

“பெத்த பிள்ளையோட போயிருக்க கோபதாபம் பாக்கக் கூடாது” இடை புகுந்து பதில் சொன்னாள் அம்மா. தாத்தா எதுவும் சொல்லாமல் உள்ளே போனார்.

திங்கட்கிழமை பள்ளிக்கூடம் போக ஆயத்தமாகி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா வேலைக்குப் போய்விட்டார். அம்மா, தாத்தாவிடம் சொல்லிவிட்டு நடந்தேன். இவ்வளவு நாளும் தாத்தாவோடுதான் பள்ளிக்கு வருவேன். ஐந்தாம் ஆண்டுக்கு வந்தபின் என்னோடு படிக்கும் பக்கத்து வீட்டு தீபனோடு வருகிறேன்.

“வீட்டில சும்மாதானே இருக்கிறன் நானும் வாறன்டா” தாத்தா கேட்டார்.

“வேண்டாம் தாத்தா. நான் வளர்ந்திட்டன் தனிய போவன்”

அன்று பள்ளிக்கூடத்தின் கடைசிமணி அடித்ததும் புத்தகப்பையைத் தூக்கியபடி எல்லோரும் வெளியே வந்தோம். காலையில் இல்லாத மழை இப்பொழுது பெய்து கொண்டிருந்தது. குடை கொண்டு வரவில்லை. சிலர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு ஓடினார்கள். ஒரு நிமிடம் நானும் ஓடலாமா என்று நினைத்தேன். மழையில் நனைந்து கொண்டு போனால் அம்மாவிடம் அடி வாங்க வேண்டும்.

வாசல்படியில் நின்று கைகளை நீட்டி மழைநீரைத் தட்டியபடி விளையாடிக் கொண்டிருந்தேன். சிலர் பேப்பரில் கப்பல்கள் செய்து ஓடும் தண்ணீரில் மிதக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். நிமிர்ந்து பார்த்த எனக்கு கொட்டும் மழையில் தாத்தா குடை பிடித்தபடி என்னுடைய மழைக்கோட்டோடு வருவது தெரிந்தது.

“தாத்தா இங்க நிக்கிறன்” கையை ஆட்டி கத்தின சத்தம் கேட்டு அருகில் வந்தார்.

“மழைக்குள்ள ஏன் தாத்தா வந்தனீங்கள். மழை விட்டதும் வருவன்தானே”

“மழை எப்ப விடுறது நீ எப்ப வாறது வா போவம்” நனையாதவாறு மழைக்கோட்டைப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

ஆறுதலாகப் படுத்திருந்த அம்மா எழுந்து வந்தாள்.

“தாத்தா இருந்தபடியால மழையில நனையாமல் வந்தனம்மா. அவர் போனால் நான் எப்பிடி வாறது” தாத்தா நிற்பதற்கு ஒரு காரணம் கண்டு பிடித்த சந்தோஷத்தில் சொன்னேன்.

“அவர் இல்லாட்டி நாங்கள் உன்னை அங்க இரு எண்டு விட்டிடுவமா. கதைக்கிறதைப் பார். இப்பிடிக் கதைக்க ஆரடா சொல்லித் தந்தது” தாத்தாவைப் பார்த்து முறைத்தாள்.

அப்பா வேலையால் வரும்போது அவருடன் தருமபுரத்தில் இருக்கும் பெரியப்பாவும் வந்திருந்தார். எனக்கு திக்கென்றது. தாத்தாவிடம் ஓடினேன்.

“பெரியப்பா வந்திருக்கிறார் தாத்தா நீங்கள் போகக் கூடாது” என்றேன்.

“திடீரெண்டு வந்திருக்கிறான் எனக்குத் தெரியாதேடா” தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும் போது பெரியப்பா உள்ளே வந்தார். அதே நேரம் அம்மா என்னைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. வெளியே வரும்போது

“வீட்டையும் குடுத்து இவ்வளவு நாளும் இங்க இருந்து உழைச்சும் குடுத்தியள் இப்ப ஏன் என்னைக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லுறான் என்ன பிரச்சனை” பெரியப்பா சொன்னது கேட்டது. தாத்தாவின் குரல் கேட்கவில்லை.

அன்றிரவு பெரியப்பா எங்களோடு இருந்து அடுத்தநாள் போவதாகச் சொன்னார். விடிந்ததும் நான் பள்ளிக்கூடம் வந்துவிட்டேன். திரும்பி வீட்டுக்குப் போன போது தாத்தா இல்லை. பெரியப்பாவோடு போய் விட்டதாக அம்மா சொன்னாள்.

போகவேண்டாம் என்று சொல்லியும் தாத்தா போய் விட்டாரே என்ற கோபத்தில் கத்தியழுதேன். அப்பா அம்மா சமாதானம் சொல்லியும் கேளாமல் சாப்பிடாமல் அழுது கொண்டேயிருந்தேன்.

“அழாமல் முதல் சாப்பிடு கொஞ்ச நாள் இருந்திட்டு வருவாரடா” அப்பா சொன்னார்.

“தாத்தாக்கு என்னிலதானே விருப்பம். என்னை விட்டிட்டு இருக்கமாட்டார். அம்மாதான் போகச் சொல்லியிருப்பா” விசும்பிக் கொண்டே சொன்னேன்.

“இல்லையடா தாத்தா சந்தோஷமாய்தான் போறார்”

அப்பா என்ன சொன்னாலும் எனக்கு அழுகை வந்து கொண்டேயிருந்தது.

படிக்கப் போனாலும் வீட்டுக்கு வந்ததும் தாத்தாவை மனம் தேடியது. பின்னேரங்களில் தாத்தாவோடு வயல்கரைக்குப் போவதும் வரம்புகளில் நடப்பதும், பறந்து வரும் குருவி கொக்குகளை விரட்டிக் கொண்டு ஓடுவதும், வாய்க்கால் கரையோரங்களில் கால்களை நனைத்து விளையாடுவதும் நினைவுக்கு வந்தது.அவரைப் பார்க்க வேணும் என்ற தவிப்பு. போவதற்கு அடம்பிடித்தேன். அப்பா சம்மதித்தாலும் அம்மா விடவில்லை.

“இவ்வளவு நாளும் இங்க இருந்திட்டு இப்பதானே போனவர். உடன போகவேண்டாம் சோதிணை வருகுது படி. லீவுக்குப் போய்ப் பாத்து வரலாம்” என்றாள்.

“தாத்தா இருந்தால் சொல்லித் தருவார். இப்ப ஆரிட்ட கேட்டுப் படிக்கிறது”

“நான் சொல்லித் தாறன்” அம்மா தாத்தாவைப்போல் திரும்ப திரும்ப சொல்லித் தராமல் என்னையே செய்யச் சொன்னாள்.

“செல்லம் குடுத்து கெடுத்து வைச்சிருக்கிறார். உன்ர வேலையளை நீதான் செய்ய வேணும்” கண்டிப்புடன் சொன்னாள்.

அன்று பின்னேரம் கணக்குப் பயிற்சிப் புத்தகத்திலுள்ள கணக்குகளைச் செய்து கொண்டிருந்தேன். ஒரு கணக்கு விளங்கவேயில்லை. அம்மாவைத் தேடினேன். வேலை முடித்து விட்டு வந்த அப்பாவோடு கதைத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா இது எப்பிடிச் செய்யிறது சொல்லித்தாங்கோ”

“அப்பாவிட்ட கேள் சொல்லித் தருவார்” என்றதும் அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது.

“களைச்சு விழுந்து இப்பதான் வேலையால வாறன். வீட்டிலயிருந்து என்ன வெட்டி முறிச்சனி. படிப்பிச்சவரை துரத்திப்போட்டு என்னைச் சொல்லிக் குடுக்கச் சொல்லுறாய்” கத்தினார்.

தாத்தாவை துரத்தி விட்டார்களா.. விரும்பிப் போனதாய்தானே அப்பா சொன்னார். தாத்தா இருந்தபோது அம்மாவுக்கு அடிக்கடி கோபம் வரும். தாத்தா போனபின்பு அப்பாவுக்கு கோபம் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

லீவு விட்ட பின்பும் அப்பாவுக்கு நேரம் கிடைக்காததால் தாத்தாவிடம் போக முடியவில்லை.

“பெரியப்பாதானே கூட்டிக் கொண்டு போனவர் அவரிட்ட தாத்தாவைக் கொண்டு வந்து விடச் சொல்லுங்கோ. என்ர பிறந்தநாளும் வருகுது. அவரோடதானே கோயிலுக்குப் போறனான்”

“போய் பாத்திட்டு வாறதுக்கு அவரை ஏன் இங்க. கோயிலுக்கு நாங்கள் கூட்டிக் கொண்டு போற…” அம்மா சொல்லி முடிக்கவில்லை

“என்ர பிறந்தநாளுக்கு தாத்தா என்னோட இருக்கவேணும்” என்று அழத் தொடங்கினேன்.

“சரி கூட்டிக் கொண்டு வாறன் அழாதை” அப்பா சொன்னதும் எனக்கு சந்தோஷமாயிருந்தது. அம்மா கோபத்தோடு முறைத்துப் பார்த்தாள்.

மூன்று மாதத்திற்குப் பிறகு வந்த தாத்தாவை ஆசையோடு அணைத்துக் கொண்டேன்.

“செல்லக்குட்டி…” என்று அணைத்து முதுகு தடவியவரின் கைகள் நடுங்குவதை உணர்ந்தேன். அன்று முழுவதும் தாத்தாவோடு இருந்தேன். தாத்தாவும் வேலை செய்யப் போகாமல் என் கூடவேயிருந்தார். பிறந்தநாளன்று புதுச் சட்டை போட்டு தாத்தாவுடன் கோயிலுக்குப் போனேன். கேக் வெட்டிக் கொண்டாடினோம்.

தாத்தா வந்து ஒருகிழமையாகி விட்டது. ஓய்வு இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர் ஒன்றும் செய்யாமல் சோர்ந்து போய் இருந்தார். வேலியின் மறுபக்கம் பிரிஞ்சிருந்தது. முற்றத்தில் புல்லு முளைத்திருந்தது. சருகுகள் முற்றம் முழுவதும் பரவியிருந்தது.எதையும் கவனிக்காமல் என்னோடயே இருந்தார்.

பாடங்கள் சொல்லித் தந்தார். அப்பம்மா மாதிரி கேள்வி கேட்டு கதைகள் சொன்னார். அவரோடு இருப்பது எனக்கு சந்தோஷமாய் இருந்தது.

“தாத்தா இனிப் போகாமல் என்னோட இருங்கோ” தாத்தாவின் கையைப் பிடித்தபடி கெஞ்சினேன்.

“உன்னைப் பாக்காமல் இருக்கிறதுதான் எனக்கும் கஷ்டமாயிருக்குதடா. அங்க பெடியள் வளர்ந்திட்டாங்கள். தங்கட வேலையளைப் பாத்து போயிடுவாங்கள். அதைச் செய் இதைச் செய் எண்டு வேலை வாங்கிறதே தவிர என்னோட ஆறுதலாயிருந்து கதைக்க ஒருத்தருமில்லை” என்றார் என்னைத் தடவியபடி.

தாத்தா பழையபடி இல்லாமல் இருப்பதை அப்பாவும் கவனித்து கேட்டார்.

“சோர்ந்து போயிருக்கிறீங்கள் ஏனப்பா உடம்பு சரியில்லையா… வாங்கோ ஆஸ்பத்திரிக்கு போய் வருவம்”

தாத்தாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனார். அவர்கள் போனதும் தீபனோடு முற்றத்திலிருந்து விளையாடி விட்டு அம்மாவைத் தேடிப் போனேன். பின்பக்க வேலியோரத்தில் நின்று அடுத்த வீட்டு மாமியோடு கதைத்துக் கொண்டிருந்தாள்.

“வந்து ஒரு கிழமைதானே. அதுக்குள்ள அனுப்பவேணும் எண்டு சொல்லுறாய். கொஞ்சநாள் இருக்கட்டுமன். எப்ப பாத்தாலும் சீலன் அவரோடயே இருக்கிறான். போக விடுவானே”

மாமி கேட்டாள்.

“இல்லையக்கா மாமாவுக்கும் வர வர ஏலாமல் போகுது. முந்தி ஒரு இடத்தில இருக்காமல் ஏதாவது செய்து கொண்டிருப்பார். இப்ப வந்ததிலயிருந்து ஒண்டும் செய்யிறதில்லை. கால் வருத்தம் உடம்பு நோகுது எண்டு சொல்லி மருந்து வாங்க கூட்டிக் கொண்டு போயிட்டார். நடந்து ஊசலாடித் திரியேக்கேயே அனுப்பிப் போடவேணும். படுக்கையில விழுந்தால் பிறகு அனுப்பேலாது இப்ப மாமியும் இல்லை நான்தான் பாக்கவேணும். வருத்தக்காரரை வைச்சுப் பாக்கேலாது இனி அவையள் பாக்கட்டுமே”

“வருத்தத்தோட அனுப்ப உன்ர மனிசன் சம்மதிப்பாரே”

“அவர் என்ன சொல்லுறது. விடிய வேலைக்குப் போனால் பின்னேரம் வருவார். அவருக்கு எங்க பாக்க நேரமிருக்கு.அதைக்குடு இதைக்குடு எண்டு சொல்லுவார் நான்தான் எல்லாம் செய்யவேணும் நான் அவரை அனுப்பப் போறன்”

“துரத்திறது எண்டு நினைச்சிட்டாய். பாத்துச் செய்” சொல்லி விட்டு மாமி போய் விட்டாள். அம்மா சொன்னதைக் கேட்டதும் கோபம் வந்தது. இதைப்பற்றிக் கேட்டால் அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும்.

இரண்டு நாள் அம்மா எதுவும் சொல்லாமல் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தாத்தா போவது பற்றிக் கதைக்கவில்லை. நிம்மதியாய் இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. தாத்தாவுடன் கோயிலுக்குப் போனேன். என்னை விட்டு தாத்தா போகக் கூடாது என்று சாமியைக் கும்பிட்டு வந்தேன்.

“தீபன் உன்னோட விளையாட வந்தவன் போய் அவனோட விளையாடு போ” என்றாள் அம்மா. விளையாட்டு என்றதும் சந்தோஷத்துடன் தாத்தாவிடம் சொல்லிவிட்டுப் பறந்தேன்.

விளையாடிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் சண்டை வந்து விட்டது. அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தேன். வாசலில் நின்ற ஓட்டோவைப் பார்த்ததும் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு உள்ளே நுழைந்தேன்.

தாத்தா புது உடுப்புப் போட்டு வெளியில் போவதற்கு ஆயத்தமாக இருந்தார். அவரின் உடுப்புகள் வைத்திருக்கும் பை அப்பாவின் கையில் இருந்தது.

“அவன் வரக்கிடையில கெதியாய்ப் போங்கோ வந்தால் விடமாட்டான்” அம்மா சொல்லிக் கொண்டிருந்தது எனக்கு கேட்டது.

பாய்ந்து தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டேன்.

“தாத்தாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டாம் அப்பா. என்னோட இருக்கட்டும். போகமாட்டன் எண்டு சொல்லுங்கோ தாத்தா” சொல்லும்போதே அழுகை வந்தது.

“எனக்கென்ன போக ஆசையேடா… அப்பா சொல்லுறாரே”

“போகமாட்டன் எண்டு நீங்கள் சொல்லுங்கோ. அப்பாவுக்கு அப்பாதானே நீங்கள். உங்கட சொல்லுத்தானே அப்பா கேட்க வேணும்”

“நீ சின்னப்பிள்ளை அப்பா அம்மா சொல்லுறதைக் கேட்கவேணும். அப்பா வளர்ந்திட்டார் இனி அவர் சொல்லுறதைத்தானே நான் கேட்க வேணும் அழாதையடா”

நான் அம்மாவைப் பார்த்து கெஞ்சினேன்.

“வேண்டாமம்மா தாத்தா இங்க இருக்கட்டும். நீங்கள் சொன்னால் அப்பா கேப்பார் சொல்லுங்கோம்மா”

“கொஞ்சநாள் அப்பா இருக்கட்டும். அவனைச் சமாதானப்படுத்திவிட்டு பிறகு கொண்டுபோய் விடுவம்” என்று தயங்கினார் அப்பா.

“போய் விட்டிட்டு வாங்கோ. நான் என்ன முதியோர் இல்லத்துக்கே துரத்திறன். அவற்ர பிள்ளை வீட்டுக்குத்தானே போறார். இவன் சின்னப்பிள்ளை நீங்கள் இவன் சொல்லுறதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீங்கள் கொஞ்சநேரம் அழுவான். பிறகு மறந்திடுவான். போங்கோ”

சொல்லியபடி அருகில் வந்து தாத்தாவைப் பிடித்திருந்த என் கையைப் பிடித்து இழுத்தாள்.

அழுது கெஞ்சினாலும் அப்பா கூட்டிக் கொண்டு போகிறாரே என்ற தவிப்போடு தாத்தாவை நிமிர்ந்து பார்த்தேன். என்னைப் பார்த்து தலையாட்டி விட்டுப் போகத் திரும்பினார்.

தாத்தாவும் அழுகிறாரா… அவர் கன்னத்தில் வழிந்த நீரைக் கண்டதும் என்னால் தாங்க முடியவில்லை. என்னைப் பிடித்திருந்த அம்மாவின் கையை உதறினேன். ஆக்ரோசத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.

“இப்ப நான் சின்னப் பிள்ளை எண்டு என்ன சொன்னாலும் கேட்கமாட்டீங்கள். நானும் வளருவன். வளர்ந்தாப் பிறகு நீங்கள் தாத்தாவை வீட்டை விட்டு துரத்திறமாதிரி உங்கள் இரண்டு பேரையும் இந்த வீட்டை விட்டு நானும் துரத்துவன்” கிரீச்சிட்டுக் கத்தினேன்.

என் கிரீச்சிட்ட சத்தத்தோடு அப்பாவின் கையிலுள்ள தாத்தாவின் பை தொப்பென்று கீழே விழுந்த சத்தமும் சேர்ந்து சுவரெங்கும் எதிரொலித்தது.

நிறைவு..

.

.

.

.

விமல் பரம்

நன்றி : ஞானம் சஞ்சிகை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More