செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தாத்தாவும் பேரனும் | சிறுகதை | பாவண்ணன் 

தாத்தாவும் பேரனும் | சிறுகதை | பாவண்ணன் 

13 minutes read

அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து நீண்டிருக்கும் பெயர் தெரியாத கொடியில் மேலும் கீழும் பூத்திருக்கும் ஊதாநிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் ஏதோ திருவிழாவுக்குக் கட்டிய சிறுவிளக்குத் தோரணமென அந்தப் பூவரிசை நீண்டிருந்தது.

புதரையொட்டி கன்னங்கரிய எருமையொன்று அப்போது வந்து நின்றது. இவ்வளவு காலையிலேயே மேய வந்துவிட்டதே என ஆச்சரியமாக இருந்தது. அது தரையில் பச்சைப்பசேலென வளர்ந்திருந்த புல்லை தேடித்தேடி மேய்ந்தது. வளைந்த கொம்பு. பெரிய கண்கள். கழுத்தில் மணி தொங்கியது. புல்லுக்காக தலையை அசைக்கும் போதெல்லாம் மணியோசை எழுந்தது. எங்கோ உரசிக்கொண்டதாலோ அல்லது ஏதோ கூர்மையான கழியோ, கிளையோ முதுகில் விழுந்து தோல் கிழிந்து கன்றியிருந்தது.

அப்போதுதான் ஒரு காக்கை பறந்துவந்து அதன் கொம்புகளுக்கிடையில் உட்கார்ந்தது. முதலில் எருமை அதைப் பொருட்படுத்தவில்லை. மெல்ல மெல்ல கொம்பிலிருந்து கழுத்தை நோக்கி நகர்ந்த காக்கை, பிறகு முதுகுத்தண்டின் மீது நடந்துசென்று முதுகிலிருந்த கையகல புண்ணுக்கு அருகில் சென்று நின்றது. ஒருகணம் எருமையின் முதுகில் குனிந்து அலகால் கொத்துவதும், மறுகணமே தலையைச் சாய்த்து நடைபாதையை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தது காக்கை. அதுவரை அமைதி காத்த எருமை, புண்ணில் காக்கையின் அலகு பட்டதும் வாலைச் சுழற்றி அது அமர்ந்திருந்த திசையில் விசிறியது. சரேலென பறந்து தப்பித்து விலகிய காக்கை காற்றிலேயே ஒரு சுற்று வட்டமடித்துவிட்டு மறுபடியும் எருமையின் முதுகில் வந்து உட்கார்ந்தது.

அக்கணத்தில் என்னைக் கடந்து சென்ற ஒரு சிறுவன், அதே காட்சியைச் சுட்டிக்காட்டி, தனக்கு அருகில் நடந்துவந்த பெரியவரிடம் “அங்க பாருங்க தாத்தா, அந்த காக்கா எருமைய வம்புக்கு இழுக்குது” என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் பக்கமாகத் திரும்பினேன்.

“அதனாலதான் வால சுத்திசுத்தி வெரட்டியடிக்குது” என்றார் தாத்தா. அதற்குள் அவரும் வேலிக்கருகில் நடைபெறும் எருமை காக்கை சீண்டலைப் பார்த்துவிட்டார்.

“என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜென்டில்மேன் தாத்தா” என்றான் சிறுவன்.

அதைக் கேட்டதும் பெஞ்சிலிருந்து எழுந்து நின்றுவிட்டேன். ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அப்படி மதிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவனுக்குள் தெய்வம்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் குரலும் சொற்களும் மண்ணுக்குரியவையே அல்ல என்று நினைத்தபடி அக்கணமே அச்சிறுவனைப் பின்தொடர்ந்தேன். அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்லும் சொற்களையெல்லாம் கேட்கவேண்டும் என்பதுபோலவும் தோன்றியது. ஏதோ நடைப்பயிற்சி செய்பவன் என்னும் தோற்றம் காட்டியபடி அவர்கள் சொற்கள் காதில் விழும் அளவுக்கு நெருக்கமாகவே நடக்கத் தொடங்கினேன்.

“இடியே இடிஞ்சி உழுந்தாலும் எருமைகிட்ட அவசரமே இருக்காது தாத்தா. ஒரு நிமிஷம் கூட நிதானத்தை கைவிடாது. அடிச்சி பிடிச்சி ஓடாது. எல்லாமே தனக்குத்தான் கெடைக்கணும்னு அலையாது. பொறுமை. எப்பவுமே பொறுமை. அதான் அதுங் குணம். அதுக்காகத்தான் அது ஜென்டில்மேன்.”

அவன் ஆர்வத்தோடு அடுக்கிக்கொண்டே சென்றான்.

”எல்லா அனிமெல்ஸ்ங்களயும் விட்டுட்டு எருமையை மட்டும் ஜெண்டில்மேன்னு ஏன் சொல்ற?” என்று தாத்தா கேட்டார்.

“எத்தன கார்ட்டூன் சேனல், போகோலாம் பாக்கறேன். எல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?” என்று வேகமாகச் சொன்னான் சிறுவன்.

“அதான், என்ன தெரியும் சொல்லு”

“சிங்கம் சண்டைபோடும். புலி சண்டை போடும். யானை சண்டை போடும். நரி, கரடி, மான் கூட சண்டை போடும். மாடுகள்ல எருது கூட சண்டைபோடும். எல்லாத்தயும் நான் பாத்திருக்கேன். ஆனா எருமை சண்டை போட்டு நான் எங்கயும் பார்த்ததே இல்ல. அதனாலதான் அது நூறு பர்செண்ட் ஜென்டில்மேன்”

“சண்ட போடாததெல்லாம் ஜென்டில்மேன் ஆயிடுமா?”

“ஆமாம். அது மட்டுமில்ல. அது ரொம்ப சாது. எப்பவும் அமைதியாவே இருக்கும். ஆர்ப்பாட்டம் பண்ணாது. யாருக்கும் கெடுதல் செய்யாது. முட்டாது. மொறைக்காது. பின்னாலயே விரட்டிகினு வராது. உண்மையான ஜென்டில்மேன்.”

பெரியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்தார். “நைஸ். நல்ல நல்ல பாய்ண்ட்லாம் சொல்றியே. விட்டா ஒரு கட்டுரையே எழுதிடுவ போலிருக்கே” என்றார்.

“நெஜமாவே ஒரு கட்டுரை ஸ்கூல்ல எழுதினேன் தாத்தா. ஒருநாள் மிஸ் உங்களுக்குப் பிடிச்ச டொமஸ்டிக் அனிமல பத்தி ஒரு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாங்க. நான் அப்பதான் எருமைய பத்தி எழுதனேன். ஆனா மிஸ் எனக்கு குட் போடவே இல்ல. எல்லாரும் ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, கன்னுக்குட்டின்னு எழுதியிருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் குட் போட்டாங்க. எனக்கு வெறும் ரைட் மார்க். அவ்ளோதான். என்னடா இப்படி எருமைய பத்தி எழுதியிருக்கியேன்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க. அப்பா கூட அன்னைக்கு நான் சொன்னத கேட்டுட்டு என்ன பாத்து ஷேம் ஷேம்னு சொன்னாரு. அப்ப நீங்க ஊருல இருந்திங்க. இங்க வரல.”

“போனா போறாங்க உடு. அவுங்களுக்கெல்லாம் எருமைய பத்தியும் ஒன்னும் தெரியல. உன்ன பத்தியும் ஒன்னும் தெரியல. உனக்குத்தான் அதனுடைய அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சிருக்குது. நீ ரொம்ப ரொம்ப வெரிகுட் பாய். நானா இருந்தா உனக்கு டபுள் குட் போட்டிருப்பேன்.”

அச்சிறுவனுக்கு அருகில் சென்று அவன் விரல்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. ஆயினும் என் குறுக்கீடு அவர்களுடைய இயல்பான எண்ண ஓட்டங்களைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சினேன். அவனைப் பார்த்தால் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடத் தோன்றியது. அவன் குரலில் இன்னும் மழலை கேட்டது.

ஒரு திருப்பத்தில் நாலைந்து மழைமரங்கள் அருகருகே நின்றிருந்தன. செக்கச்செவேலன மலர்ந்த மலர்களும் பச்சை இலைகளும் கிளைமுழுக்க அடர்ந்திருந்த கோலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவற்றின் கிளைகளில் அங்கங்கே வெண்ணிறப் பூக்கள் பூத்துத் தொங்குவதுபோல கொக்குகள் அமர்ந்திருந்தன. இன்னொரு கூட்டம் கழுத்தை முன்னோக்கி நீட்டியபடி இறக்கையை விரித்து வானத்தில் வட்டமிட்டது.

தாத்தா அவனுக்கு அந்தக் கொக்குக்கூட்டத்தைக் காட்டினார். சிறுவன் அதைப் பார்த்துவிட்டு கைதட்டிக் குதித்தான்.

“தாத்தா, ஒய்ட் அண்ட் ஒய்ட் யூனிஃபார்ம்ல ஸ்கூல் பிள்ளைங்க ஓடி விளையாடற மாதிரி இருக்குது.”

கொக்குவட்டத்தில் பதிந்த கண்களை அவனால் விலக்கவே முடியவில்லை. பரவசத்தோடு “வெள்ளைத் தாள கட்டுகட்டா கிழிச்சி விசிறினா பறந்து போவுமே, அது மாதிரி இருக்குது” என்றான். உடனே அடுத்து “பட்டம் விடற போட்டியில எல்லாப் பட்டங்களும் வெள்ளையாவே பறந்தா எப்படி இருக்கும், அப்படி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவனுக்கு அதைப்பற்றி சொல்லி மாளவில்லை. மீண்டும் “முதுவுல வெள்ளையா துணிமூட்டைய தூக்கிவச்சிகினு வெளியூருக்கு போற கூட்டம் மாதிரி இருக்குது” என்றான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டு “ஆமா ஆமா” என்று தாத்தாவும் தலையசைத்தார்.

”இவ்ளோ கொக்குங்களும் இந்த மரத்துலயே இருக்குமா தாத்தா?”

“ஆமா”

“எல்லாமே இங்க கூடு கட்டியிருக்குமா?”

“ஆமா”

“கூட்டுல முட்டை போட்டு வச்சிருக்குமா?”

“ஆமா”

“கொக்கு மீனத்தான சாப்புடும்? எல்லா கொக்குங்களுக்கும் இந்த கொளத்துல மீன் இருக்குமா?”

“மீன மட்டும்தான் சாப்புடும்னு சொல்லமுடியாது. சின்னச்சின்ன பூச்சிகளயும் புழுக்களயும் கூட புடிச்சி சாப்புடும்.”

“கொக்குகளுக்கு கால்கள் ஏன் ஸ்கேல் மாதிரி நீளமா இருக்குது?”

“அதுவா, அது கொளத்தோரமா ஏரிகரையோரமா தண்ணியில, சேத்துல எல்லாம் நடக்கணுமில்லையா, அப்ப அதனுடைய கால் குட்டையா இருந்தா மாட்டிக்கும். நீளமா இருந்தாதான் நடக்கறதுக்கும் மீனயும் பூச்சியயும் தேடி கொத்தி தின்னறதுக்கும் வசதியா இருக்கும்.”

”குட்டி கொக்கு கூட மீன கொத்தி தின்னுமா தாத்தா?”

”குட்டிகளுக்கு அம்மா கொக்கே எடுத்தும் போயி ஊட்டிவிடும்”

“குருவி மாதிரியா?”

“ஆமா”

“நீங்க குட்டி கொக்குகள பாத்திருக்கியா தாத்தா?”

“ம்.”

“எப்ப?”

“உன்ன மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல”

அவன் ஒருகணம் சந்தேகம் படிந்த பார்வையோடு அவரை நோக்கினான்.

“நீங்க அப்ப எங்க இருந்திங்க?”

“நான் எங்க கிராமத்துல மூனாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு பெரிய ஏரி உண்டு. அங்க நெறய கொக்குகள்லாம் வரும். நாங்க சின்ன பிள்ளைகள்லாம் சேர்ந்து ஏரிக்கரையிலதான் விளையாடுவம். அந்த சமயத்துல பாத்திருக்கேன்.”

“ஐ. நல்ல கதைமாதிரி இருக்குது. சொல்லுங்க தாத்தா. குட்டி கொக்குகள்லாம் அப்ப அங்க வருமா?”

கொக்குக்கூட்டத்தின் மீது பதிந்திருந்த பார்வையை விலக்கி தாத்தாவின் கையைப் பற்றி கெஞ்சினான் அவன். தாத்தா புன்னகைத்தபடி “சொல்றேன். சொல்றேன். குதிக்காம ரோட்ட பாத்து நடந்துவா” என்றார். சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

“நாங்க பத்து பன்னெண்டு பேரு ஒரே வயசுக்காரங்களா இருந்தோம். எல்லாரும் ஒரே செட். ஒன்னாதான் பள்ளிக்கூடம் போவோம். ஒன்னாதான் விளையாடுவோம். ஒன்னாதான் ஏரியில குளிப்போம். ஒருநாள் கரையோரமா நாங்க குளிச்சிட்டிருந்த நேரத்துலதான் கொக்குகள் கூட்டமா வந்தத பாத்தம். வெள்ளைவெளேர்னு ராக்கெட் மாதிரி சுத்தி சுத்தி வட்டம் போட்டுதுங்க. மொதல்ல பெரிய வட்டம். அப்பறமா சின்ன வட்டம். மறுபடியும் பெரிய வட்டம். நாங்க எல்லாருமே கரையில வந்து நின்னுகிட்டு கைய தட்டி ஓன்னு சத்தம் போட்டம்.”

“அம்பது கொக்கு இருக்குமா?”

“நூறு கூட இருக்கும். அப்படியே ஏரோப்ளேன் எறங்கறமாதிரி ஒன்னொன்னும் சைங்னு கீழ தாழ்ந்து வந்து பாறைகள் மேல வந்து ஒக்காந்துதுங்க.”

“அதுல குட்டி கொக்குங்க இருந்ததா?”

”ம். ரெண்டு குட்டி கொக்குங்க”

“அதுங்களும் பறக்கறத பாத்தீங்களா?”

“ம். பக்கத்துல போய் பாக்கலாம்னு நாங்க அதுங்கிட்ட சத்தம் போட்டுகிட்டே ஓடினோம். கொக்குகள் எங்கள பாத்துட்டு பயத்துல எழுந்து பறந்து போய்டுச்சிங்க.”

“ஐயையோ, அப்பறம்?”

“ரொம்ப தூரம்லாம் போவலை. பக்கத்துலதான் ஒரு வயல் இருந்தது. கம்பு, தினை, எள்ளுலாம் வெளஞ்ச வயல். எல்லா கொக்குகளும் அங்க போய் எறங்கிடுச்சிங்க. நாங்களும் விடாம அதும் பின்னாலயே ஓடினோம். திடீர்னு ஒரு கொக்கு கூட கண்ணுக்கு தெரியவே இல்ல. திடீர்னு எல்லாமே மறஞ்சிட்டுதுங்க. நாங்க திகைச்சிபோய் அங்கயே நின்னு திருதிருனு முழிச்சிட்டிருந்தம். திடீர்னு அம்புவிட்ட மாதிரி எல்லா கொக்குகளும் வயலுக்குள்ளேர்ந்து மேல பறந்துபோச்சிங்க. நாங்க உடனே ஓன்னு சத்தம் போட்டோம். ரெண்டு மூனு வட்டம் மேலயே அடிச்சிட்டு மறுபடியும் எல்லா கொக்குகளும் கீழ எறங்கிச்சிங்க. கீழ எறங்கனதுமே கண்ணுக்குத் தெரியாம மறஞ்சிடும். மறுபடியும் சத்தம் போட்டா படபடன்னு றெக்கைய அடிச்சிகிட்டு பறந்து போவும்.”

“ஐ, நல்லா இருக்குதே இந்த விளையாட்டு.”

“கிட்ட போய் பாக்கணும்ங்கற ஆசையில நாங்க எல்லாருமே சத்தமில்லாம அடிமேல அடிவச்சி வயலுக்குள்ள தலைய தாழ்த்திகிட்டு போனோம். ஒரு கட்டத்துல கொக்கு உக்காந்திருக்கறதுலாம் நல்லா தெரிஞ்சிது. ஒரு அம்மா கொக்குகிட்ட ரெண்டு குட்டி கொக்கு. ரெண்டும் அம்மா கொக்கு கால சுத்திசுத்தி வந்திச்சிங்க. பாக்கறதுக்கு கோழி குஞ்சுங்க சுத்தி வருமே, அந்த மாதிரிதான் இருந்திச்சி.”

“ரொம்ப பக்கத்துல போயிட்டிங்களா?”

“ரொம்ப பக்கத்துல போனா பயந்து பறந்துடுமில்லயா? அதனால் கொஞ்சம் மறைவா தள்ளி உக்காந்துகினு அதுங்களயே பாத்து ரசிச்சிகிட்டு உக்காந்துட்டம். அந்த நேரம் பாத்து எனக்குப் பின்னால நின்னுட்டிருந்த ஒரு பையன் சட்டுனு ஒரு கல்ல எடுத்து ஒரு குட்டி கொக்க குறி பாத்து அடிச்சிட்டான்.”

“ஐயையோ, அப்பறம்?”

“குட்டிக்கு தலையில சரியான அடி. அப்படியே கீழ சுருண்டு உழுந்துட்டுது. உடனே எல்லா கொக்குங்கள்ளாம் பட்டுனு எழுந்து சத்தம் போட்டுகினே பறந்துடுச்சிங்க. அம்மா கொக்கும் இன்னொரு குட்டி கொக்கும் கூட பறந்துட்டுதுங்க. கீழ உழுந்த குட்டி கொக்கு பறந்து வரும்ன்னு அதுங்க ரொம்ப நேரம் சுத்திசுத்தி வந்ததுங்க. ஆனா அது எழுந்திருக்கவே இல்ல. இனிமே வராதுன்னு தெரிஞ்சதும் அதுங்க ரொம்ப தூரம் பறந்து போய்ட்டுதுங்க. நாங்க எல்லாரும் குட்டி கொக்கு கிட்ட ஓடிபோய் தூக்கி நிக்க வச்சம். தலை வளைஞ்சி கீழ சாஞ்சிட்டுது. எனக்கு கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது. குட்டி கொக்க மடியில போட்டு தட்டி கொடுத்து பார்த்தேன். தடவி கொடுத்து பார்த்தேன். துணிய தண்ணியில நனச்சி எடுத்தாந்து மூஞ்சியில தெளிச்சிகூட பார்த்தேன். மூச்சுபேச்சு இல்லாமயே கெடந்தது அது. ஓன்னு அழுதுட்டேன் நான்.”

“செத்துட்டுதா? ஐயோ பாவம்.”

“அன்னைலேர்ந்து எந்த பறவையா இருந்தாலும் சரி, தள்ளி நின்னு பாக்கறதோடு நிறுத்திக்கணும்ன்னு முடிவு செஞ்சிட்டேன். அதனுடைய உலகத்துக்குள்ள நாம் போகக்கூடாது.”

“ஏன் அந்த ஃப்ரண்ட் கல்லால அடிச்சாரு?”

“வேணும்ன்னு அடிக்கல. ஏதோ வேகத்துல விளையாட்டா அடிச்சிட்டான்.”

சிறுவனின் கவனம் மறுபடியும் கொக்குகள் மீது பதிந்தது. அவை வட்டமிட்டு பறப்பதைப் பார்த்தபோது அவன் தன்னையறியாமலேயே கைகளை இறகுகள்போல விரித்தான்.

“நமக்கும் பறக்கத் தெரிந்தா ரொம்ப நல்லா இருக்கும், இல்ல தாத்தா?”

“மனிதர்களும் ஒரு காலத்துல பறவையா பறந்து திரிஞ்சவங்கதான். இப்ப மாறிட்டாங்க”

“உண்மையாவா? குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு எங்க மிஸ் சொன்னாங்க.”

“அதுக்கு முன்னால பறவையா இருந்து, குரங்கா மாறி, அப்பறமா மனிதனா மாறிட்டான்.”

“அது ஏன் அப்படி? பறவையா இருக்க மனிதனுக்கு புடிக்கலையா?”

“இந்த கைகள் இருக்குதே, அதுதான் மொதல்ல றெக்கயா இருந்தது. உழைச்சி வேலை செய்யணும்ங்கறதுக்காக றெக்கை கையா மாறிட்டுது. உழைப்பால அவன் பணம் சேத்தான். நிலம் வாங்கனான். ஊடு கட்டனான். வேலைக்கு போயி பெரிய ஆளாய்ட்டான். பறவைகள் அப்படி இல்லையே. அதுங்களுக்கு கொத்தி தின்ன என்ன கெடைக்குதோ, அதுவே போதும். அதனால அது இன்னும் பறந்துகிட்டே இருக்குது.”

”குட்டி கொக்குகள்லாம் பறக்கறதுக்கு எப்படி கத்துக்கும் தாத்தா?”

“அம்மா கொக்கு சொல்லிக்கொடுக்கும்.”

“அதான் எப்படி சொல்லிக்கொடுக்கும்ன்னு கேக்கறேன்.”

“றெக்க முளைக்கிற வரைக்கும் குட்டி கொக்குக்கு அம்மா கொக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துகிட்டே இருக்கும். அது வளரவளர கொஞ்சம்கொஞ்சமா றெக்க வந்துடும். பசியும் அதிகமாயிடும். அம்மா கொக்கு கொண்டுவந்து கொடுக்கிற சாப்பாடு பத்தாது. அதுவா தேடி சாப்படவேண்டிய நிலைமை உண்டாய்டும். அப்ப அம்மா கொக்கு குட்டி கொக்குக்கு முன்னால றெக்கய அடிச்சி அடிச்சி காட்டும். பறந்து வா பறந்து வான்னு சொல்லும். மொதல்ல குட்டிக்கு உடம்பு நடுங்கும். மெதுவா றெக்கய விரிச்சி அடிச்சி காத்துல எம்பிஎம்பித் தாவும். ரெண்டு மூனு தரம் உழும். எழுந்திருக்கும். அப்பறம் தேடி போனாதான் சாப்பாடுன்னு புரிஞ்சிடும். சட்டுனு ஒரு நிமிஷத்துல காத்து மேல அதுக்கு ஒரு புடிமானம் வந்துடும். வானத்துல பறக்கற ருசி எப்படிப்பட்டதுன்னு அதும் மூளையில பதிஞ்சிடும். அதுக்கப்புறம் அதனால றெக்கையை மடிக்கமுடியாது.”

தாத்தா சொல்லிமுடிக்கும் வரை அவனும் ஒரு குட்டி கொக்குபோல கைகளை இறக்கைபோல மடித்தும் விரித்தும் பறக்கும் கனவுடன் நடந்துவந்தான்.

”இந்த கொக்குகளுக்கெல்லாம் இங்க மரத்துல கூடு இருக்குமா தாத்தா?” என்று உடனே அவன் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டான்.

“நிச்சயமா இருக்கும்.”

“எங்க இருக்குது தாத்தா, ஒன்னு கூட எனக்குத் தெரியலயே.”

“இரு காட்டறேன்” என்றபடி தாத்தா நின்றுவிட்டு அண்ணாந்து மரங்களில் கிளைகிளையாகத் தேடினார். சிறுவனும் கண்போன போக்கில் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி இருந்தான்.

அதற்குள் தாத்தா ஒரு கூட்டின் இருப்பிடத்தைக் கண்டுவிட்டிருந்தார். உற்சாகத்தோடு சிறுவனுக்கு அருகில் குனிந்து விரலை நீட்டி கூட்டைக் காட்டினார். அவன் கண்கள் மலர்ந்தன. “ஒரு பேஸ்கெட் மாதிரி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவன் கன்னங்களில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் அவர்.

“அது சரி தாத்தா, அது கொக்கு கூடுதான்னு எப்படி உறுதியா சொல்லமுடியும்? காக்கா கூட மரத்துலதான கூடு கட்டுது?” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினான். அவர் அவன் கன்னத்தில் மீண்டும் தட்டிக்கொடுத்தார்.

“நீ சொன்ன இல்ல, கூடு பேஸ்கெட் மாதிரி இருக்குதுன்னு. காக்கா கூடு சின்ன பேஸ்கெட் மாதிரி இருக்கும். கொக்கு கூடு பெரிய பேஸ்கெட் மாதிரி இருக்கும். அதான் வித்தியாசம்.”

”சரி சரி” என்று தலையசைத்தான் சிறுவன். குனிந்து துள்ளலோடு நடக்கத் தொடங்கியதுமே ”இப்ப கொக்கு கூட்டுல முட்டை இருக்குமா தாத்தா?” என்று கேள்வியைத் தொடங்கினான். “தெரியலயே ராஜா” என்று தாத்தா புன்னகையோடு உதட்டைப் பிதுக்கினார்.

அதற்குள் நாங்கள் வட்டப்பாதையை முழுமை செய்திருந்தோம். மீண்டும் அந்த ஊதாப்பூக்கள் பூத்திருக்கும் வேலி. சிமென்ட் பெஞ்ச். அந்த எருமை பொறுமையாக இன்னும் மேய்ந்துகொண்டிருந்தது.

“தாத்தா, நம்ம ஜென்டில்மேன் இன்னும் அங்கயே நின்னுட்டிருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சுட்டிக் காட்டினான் சிறுவன். ”அட, ஆமாம். நின்ன எடத்துலயே நிதானமா புல் சாப்படறாரு” என்றார் தாத்தா.

“ஒரே ஒரு வித்தியாசம் தாத்தா. அப்ப அதும் முதுகு மேல காக்கா உக்காந்திட்டிருந்தது. இப்ப ஒரு கொக்கு வந்து உக்காந்திருக்குது”

இருவரும் அதை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டினார்கள்.

“நாம செல் எடுத்தாந்திருந்தா இப்ப ஒரு போட்டோ எடுத்திருக்கலாம். என் ஃப்ரண்ட்ஸ்ங்களுக்குலாம் வாட்ஸப்ல அனுப்ப வசதியா இருந்திருக்கும்.”

“அடுத்த சண்டே வரும்போது எடுத்தாரலாம். எருமையும் கொக்கும் இங்கதான இருக்கும். அப்ப எடுத்துக்கலாம்”

“தாத்தா, ஒரு விஷயம் கவனிச்சிங்களா? கொக்குகூட எருமை முதுவுல என்னமோ அலகால கொத்திகிட்டே இருக்குது. ஆனா காக்கா கொத்தன சமயத்துல மட்டும் வால சொழட்டி சொழட்டி வெரட்டியடிச்சிதே அந்த எருமை. இப்ப ஒன்னுமே செய்யாம அமைதியா இருக்குது பாருங்க.”

“ரெண்டு கொத்தலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்குது.” என்று சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் தாத்தா.

“அப்படியா? என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலயே, என்ன வித்தியாசம்?”

“காக்கா எருமையுடைய புண்ணுல குத்திக்குத்தி ரணமாக்குது. புண்ணுல தெரியற சதய கொத்தி கொத்தி அது சாப்புடுது. அந்த வேதனையில காக்கைய விரட்டுது எருமை. ஆனா கொக்கு அப்படி இல்ல, எருமை தோல்ல ஒட்டியிருக்கும் உண்ணிகளயும் பூச்சிகளயும் கொத்தி சாப்புடுது. அது எருமையுடைய வேதனைய குறைக்குது. சுத்தப்படுத்துது. அதனால அமைதியா இருக்குது.”

“ஓ, அப்ப எருமையும் ஜென்டில்மேன். கொக்கும் ஜென்டில்மேன்.”

“ஆமா” என்று தலையசைத்தார் தாத்தா. “ஆனா இது சாதாரண கொக்கு இல்ல, மாடுமேய்ச்சான் கொக்கு.”

ஒரு புதுமையான பெயரைக் கேட்டதுபோல விழிவிரிய பெரியவரைப் பார்த்தபடி நின்றுவிட்டான் சிறுவன். “ரொம்ப தூரத்துலேர்ந்து எருமை முதுகுல கொக்க பாக்கறவங்களுக்கு கொக்குதான் மாடு மேய்ச்சிட்டு போறமாதிரி இருக்கும். அதனால அந்தப் பேரு” என்றார் தாத்தா.

“ரொம்ப பொருத்தமான பேர் தாத்தா.”

“பேசிட்டே நடந்ததுல ஒரு ரவுண்ட் முடிஞ்சதே தெரியல. இப்ப என்ன, வீட்டுக்குப் போவலாமா, ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாமா?”

கொஞ்சம் கூட காத்திருக்காமல் “ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்று பதில் சொன்னான் சிறுவன். ”இன்னைக்கு நாலு, அஞ்சி ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்றபடி கையிலிருந்த விரல்களையெல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து விடுவித்தான்.

அவர்களுடைய முடிவை அறிந்து, அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ஒரே கணத்தில் என் மனம் மாறிவிட்டது. சிறுவனுடைய ஒவ்வொரு சொல்லும் எனக்குள் புகுந்து என்னென்னமோ செய்துவிட்டது. அவன் கன்னத்தைத் தொட்டு ஒருமுறை தட்டிக் கிள்ளவேண்டும் போல இருந்தது. மெதுவாக “எக்ஸ்க்யூஸ் மி” என்று அழைத்து அவர்களை நிறுத்தினேன். அந்த அழைப்பு தமக்கானதுதானா என்பதுபோல அவர்கள் இருவரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் திரும்பி என்னைப் பார்த்தார்கள்.

நன்றி : பதாகை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More