8.3 வீதமாக உள்ள மொத்த தேசிய வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், உலகுக்குக் கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதாரக் கொள்கையூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் ரூபா நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்பம் வர்த்தகம் ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.
52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
பிரபலமான தீர்மானங்களை விட நாட்டுக்குச் சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.
இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சில் நம்பிக்கை உள்ளது.
2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” – என்றார்.