“வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்கு அரச காணியைப் பெற்றுக் கொடுப்பதுதான் எனது நோக்கமே தவிர, மக்களின் காணிகளைப் பிடித்து அவற்றை முப்படையினருக்கு வழங்கும் பணி என்னுடையது அல்ல.”
– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போர் நிறைவடைந்த பின்னரும்கூட, வடக்கு மாகாணத்தில் காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பதென்பது மந்த கதியிலேயே காணப்படுகின்றது. வடக்கின் ஆளுநர் என்ற வகையில் மக்களின் தேவைகளை இனங்கண்டு அதை நிறைவேற்றுவது எனது பணியாகும்.
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரச காணிகளின் தேவைப்பாடுடையவர்களாக இருக்கின்றார்கள். வடக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விவரங்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி அது தொடர்பான முடிவுகளை எடுக்கவே அவர்களை அழைத்திருந்தோம்.
வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை உரிய முறையில் அடையாளப்படுத்தாத பலர் இருக்கின்ற நிலையில் அவர்களின் காணிகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை ஆளுநர் செயலகம் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றது.
வடக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு கையகப்படுத்தும் காணி தொடர்பில் ஆளுநர் இறுதி முடிவெடுப்பதில்லை. அது தெரிந்திருந்தும் ஆளுநர் மக்களின் தனியார் காணிகளைப் பிடித்துக் கொடுக்கின்றார் என தமது அரசியல் தேவைகளுக்காகச் சிலர் மக்களுக்கு தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” – என்றார்.