வவுனியா, ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இவ்வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கணவன், மனைவி இருவரையும் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த முதலாம் எதிரிக்கு இரட்டை மரணதண்டனையும், கொல்லப்பட்டவர்களின் நகைகளைக் கொள்ளையடித்தமைக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
அதேவேளை, முதலாம் எதிரியின் சகோதரராகிய இரண்டாம் எதிரி குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது.
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு எதிரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
முதலாம் எதிரி கொலையுண்டவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவராவார். கொலையுண்ட குடும்பஸ்தருடன் இறுதியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்த்துக்கு வருமாறு எதிரி அழைத்ததையடுத்து, அங்கு சென்ற போதே அவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் வீட்டில் வைத்து அவரது மனைவி கொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்டவர்களின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. துண்டாடப்பட்ட விரல்கள் சடலங்களின் அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி கிணற்றில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கத்தி குடும்பப் பெண்ணின் சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்டது.
கொலையுண்ட குடும்பஸ்தருடன் முதலாம் எதிரி இறுதியாகத் தொலைபேசியில் கதைத்தது தொடர்பில் வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதவானின் விசேட கட்டளையின் பேரில் டயலொக் நிறுவன அறிக்கை பெறப்பட்டு அதன் மூலம் அந்த அழைப்பை ஓமந்தை தொலைத்தொடர்பு கோபுரப் பிரதேசத்தில் முதலாம் எதிரியே ஏற்படுத்தினார் என்பதும் பொலிஸ் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டு இந்தக் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன என்று ஓமந்தை பொலிஸ் நிலையப் புலனாய்வு பொறுப்பதிகாரி நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் மகள், முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் தனது தாய், தந்தையரின் நகைகள் என்று பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டி சாட்சியமளித்தார் எனவும், வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நகைகள் பின்னர் நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளரால் களவாடப்பட்டு அவர் தற்சமயம் தலைமறைவாகி இருக்கின்றார் எனவும் வவுனியா நீதிமன்றப் பதிவாளர் மன்றில் சாட்சியமளித்தார்.
இறந்தவர்களின் உடல்களில் கொடூரமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன என்றும், இரு சடலங்களிலும் கை விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன என்றும், மொட்டையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தனர் என்றும் மருத்துவ பிரசோதனை செய்த வைத்திய நிபுணர் வைத்தியரத்ன அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, இரட்டைக் கொலை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு முதலாம் எதிரியே குற்றவாளி என்று அறிவித்தார்.
அத்துடன் இரண்டு கொலைகளுக்கும் முதலாம் எதிரிக்கு இரட்டை மரணதண்டனையும், கொல்லப்பட்டவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்குத் தலா 10 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.