செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அனல் காற்று | சிறுகதை | கவிஜி

அனல் காற்று | சிறுகதை | கவிஜி

15 minutes read

மரத்துக்கு பின்னால் ஒரு மறதியை போல அமர்ந்திருந்தாள் இன்பலட்சுமி.

உதவி செய்த போன் சொன்ன அடையாளம் ஒத்தை புளியமரம். அடித்து பிடித்து ஓடி வந்த ரத்னா… அவள் அருகே ஓர் அன்னையை போல நெருங்கினான். நெக்குருகும் பார்வை அவனுக்கு.

பார்த்ததுமே….. “மாமா……!” என்று அமர்ந்தபடியே தாவி கழுத்தைக் கட்டிக்கொண்டு ஏங்கி ஏங்கி அழுகை அடக்கினாள் இன்பலட்சுமி.

“என்னாச்சு இன்பா….ஏன் இங்க உக்காந்துருக்க… என்னமோ மாதிரி இருக்க… நீ எப்போ இங்க வந்த… உன்ன யாரு இங்க தனியா வர சொன்னா… இங்க என்ன பண்ணிட்டு இருக்க.. இங்க எப்பிடி…..” மூச்சு விடாமல்தான் கேட்க முடிந்தது அவனுக்கு. திடுதிப்பென்று அவளைக் கண்டதில் கன்னத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தன கண்கள். கண்கள் சுழலும் காட்சியில்… கோணல் மாணல் சுற்றுப்புறங்கள் தான் உணர்ந்தான். உள்ளே என்னென்னவோ தடுமாற்றம். இல்லாத ஊஞ்சல் இதயத்துக்கு பக்கத்தில் தாறுமாறாக அசைந்தது.

“சரி சரி அழாத.. வந்துட்டேன்ல…” என்று மீண்டும் தலையை தடவி நெற்றியை வழித்து.. முகத்தை துடைக்க… கண்களில் சூடான நீர் கோடுகள் கரகரவென கொட்டியது.

“ஐயோ என்னாச்சு… என் புள்ளைக்கு…! ஏய்… என்னடி இது…?” கழுத்தை பிடித்து நிமிர்த்தி முகத்தை ஏந்தினான்.

கண்களில் கலவரம்…. கன்னத்தில் கடி பட்ட காயம்… சோர்ந்து போன கழுத்தில் மூத்திர வாசம்..

அவளுடம்பில் ஆங்காங்கே திட்டு திட்டாய் ஆம்பள ஒழுகல்…

“நினச்சன்… நினச்சேன்…”

அவளை விட்டு தன்னையே பற்றிக் கொண்டு தலையில் கை வைத்து உடலை காற்றினில் சரித்து மூச்சு வாங்கினான். வெளியெங்கும் காற்றில்லை. வியர்வை சுருளும் பகலில் குறி குறியாய் தொங்குவது போல உணர்ந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. பக்கத்தில் மரமொட்டி ஒரு வழிகாட்டியாக… பூமி சதுரம் தான் என அடித்து சொல்வது போல இருந்த பெட்டி கடையில் நீர் வாங்கி வந்து முகத்தை கழுவி விட்டான். குடிக்க கொடுத்தான்.

“அழுகாத…. அழுகாம சொல்லு பாப்பா…”- அதட்டினான். அதட்டும் போது தான் பாப்பா வரும் என்று அவளுக்கு தெரியும். பிறந்ததில் இருந்தே கூடவே இருக்கும் மகராசி. அத்தை புள்ளன்னு தான் பேர். ஆனா ஆண்டவன் புள்ள அது. அவன் ஆழ்மனதில்… அன்பின் அரிப்பு தவியாய் தவித்தது.

“ஆமா…ஆறு மாசமா நீ ஊருக்கு வரவே இல்ல… அதான் என்னாச்சுன்னு பாக்கலான்னு வந்தேன்…”

அவளையே அழுத்தமாய் பார்த்து விட்டு…” சரிடி….. எனக்கு போன் பண்ண வேண்டியது தான… சரி எப்போ வந்த.. எங்கன்னு போயி….என்ன ஆச்சு… ?” அவன் அவளையே ஊடுருவினான். புள்ளையை சலித்து விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து விட்டது. உடல் முழுக்க சூடு பரவ… அவள் கண்களில் வலி.

“சொல்லு…..” கத்தினான்.

“உன் அட்ரஸ் காட்டி ஒவ்வொருத்தர்கிட்டாயா கேட்டுட்டு இருந்தேன்.. ஒருத்தன் பாத்துட்டு… எனக்கு தெரியும்னு சொல்லி கூட்டிட்டு வந்து இங்க தான் இந்த வீதில தான் ஒரு வீட்டுல விட்டான். அந்த வீட்டுல இருந்த சனியன் என்னைய அடைச்சு வெச்சி…. கட்டி வெச்சிட்டு… அவன் கூட இன்னும் ரெண்டு பேரு மாமா… அம்மணமா சுத்தி நின்னுட்டு…” நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டாள்.

“பாத்து பாத்து உனக்குன்னு சேத்து வெச்சது எல்லாம் புடுங்கி தின்னுட்டானுங்க… திருட்டு தேவிடியா பசங்க…” மீண்டும் நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டாள்

“ஐயோ முட்டாள் முட்டாள்… இதுக்கு தான் படி படினு தலை தலையாய் அடிச்சுகிட்டேன்…” அவளை பார்த்து பார்த்து குலுங்கினான்.

“ஐயோ மாமா.. நான் படிக்கவா பொறந்தேன்… உன்ன பாத்துக்கதான மாமா பொறந்திருக்கேன்..” என்றவளை அதற்கு மேல் திட்ட முடியவில்லை. இப்படியா ஒருத்தி இருப்பா.. ஒரு விவரமும் தெரியாம இப்படி வந்து… என்னன்னு இத சரி செய்யறது…”

“போலீசுக்கு போலாம் எந்திரி…” என்றான்.

“எதுக்கு மூணு பேரு பாத்ததை முழு ஊருக்கும் சொல்றதுக்கா…”

ஒரு கிறுக்கியை போல கழுத்தை அசைத்து பாவமாய் கேட்டவளை… ஒரு கணம் தீர பார்த்து…விட்டு… “ஐயோ சாமி…. என் புள்ளயே இப்பிடி பண்ணிருக்கானுங்களே…” ரத்னா தலை தலையாய் அடித்துக் கொண்டான்.

“இந்த வருஷம் வேலை பெர்மனண்ட் ஆகிடும்.. அப்புறம் வந்து கூட்டிட்டு வந்தர்லான்னுதான நினைச்சேன்.. அதுக்குள்ள உன்ன யாருடி பைய தூக்கிட்டு இங்க வர சொன்னது….” முடியை பிடித்து ஆட்டினான். ஆட்டிக் கொண்ட உள்ளங்கை அழுந்த உச்சந்தலை அழுத்தி தோளோடு சாய்த்துக் கொண்டான்.

“நியாயம் கேட்டே ஆகணும்… இதை விட்ற முடியாது…” முனங்கினான்.

பெட்டிக்கடை காரருக்கு விஷயம் புலப்பட்டு விட்டது…

“என்ன நியாயத்தை தம்பி கேப்ப… அவன்…. அவன் ஊரை அடிச்சு உலைல போடறவன்… பொறுக்கி பைய….பணம் ஆளு அரசியல்னு இந்த ஊருக்கே அவன் தான் ராஜா…. போலீசு அவன் காலுக்குள்ள.. ஒன்னும் பண்ண முடியாது…” காத்துவாக்கில் குரல் தான் அவர் என்பது போல பேசினார். பேச்சில் அனுபவம் பெட்டிக்கடையை சுற்றும் அனல் காற்று போல சுழன்றது.

“இல்லங்கய்யா.. இப்பல்லாம்.. நம்மள மாதிரி ஏழை பாழைங்களுக்கு கோர்ட் கை குடுக்குது..” குருவி தலையில் பனங்காய் கொண்டவன் போல கழுத்து அழுந்த பேசினான். நம்பிக்கையை எங்கிருந்தாவது கொண்டு வந்து தன் மீது கவிழ்த்துக் கொள்ள… உள்ளே ஒரு வெறியை அவனே உருவாக்கிக் கொண்டிருந்தான்.

“எங்க தம்பி… பத்து கேஸ்ல ஒன்னு தான் நீ சொல்ற மாதிரி நியாயத்து பக்கம் நின்னு ஜெய்க்குது.. மீதிக்கெல்லாம் பணம் தான் ஜெய்க்குது..” பெரும் அனுபவம்… அது சுய அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும். பிழையற்ற தீர்க்கம் தன்னை ஒளித்துக் கொள்வதில் அவரிடம் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்தது.

“ஏதும் வலி இருக்கா…..?” என்று இன்பாவின் முகத்தை பார்த்தாலும்… கண்கள் கீழே பரிதவிப்போடு ஆராய்ந்தது.

“இல்ல மாமா.. நீ ஒரு வாட்டி ஏதோ புஸ்தகத்தை படிச்சிட்டு ஒரு பழமொழி சொன்னீல்ல… தப்பிக்க முடியாதுனு தெரிஞ்சிருச்சுனா அதை அனுபவிச்சிடணும்னு…. அப்பிடி தான் நினைச்சுக்கிட்டேன்… எவ்வளவோ போராடி பாத்தன்… தடி மாடுங்க மாதிரி இருக்கானுங்க… எழும்ப முடியல.. பேசாம உன்னய நினைச்சுகிட்டு படுத்துகிட்டன்.. உசுராவது மிஞ்சட்டும்ன்னு…” தம் கட்டி பேசியவள் வாயில் இருந்து எச்சில் வழிய ஒரு பெருஞ்சாவு அழுகை தொண்டைக்குள் அங்கும் இங்கும் ஒரு நாயின் நாக்கோடு அலைந்தது. என்ன தான் செய்ய என்ற வேதனையின் நடுக்கத்தில் ரத்னாவுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. இந்த மரத்தில் முட்டிக் கொண்டு செத்து விட தோன்றியது. அவளை தோளோடு சேர்த்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதான். ஆனாலும் சத்தம் வந்தது.

“ஊருக்கு போய்றலாம் மாமா… இங்க என்ன மனுச பயலுக இப்பிடி இருக்கானுங்க…. முன்ன பின்ன பொம்பளங்கள பாக்காத மாதிரி… கழுதையாட்டம் இருக்கானுங்க… இப்பிடியா காஞ்சு கிடப்பானுங்க… இவுனுங்க பொண்டாட்டிகல்லாம் என்னத்த புடுங்கிட்டுருக்காலுக…” பேசிக் கொண்டே கடைக்காரர் பக்கம் கழுத்தை சாய்த்து… “அய்யா எங்கூருல நாங்கல்லாம் ஆத்துல தான் குளிப்போம்.. ஒரு பைய எட்டி கூட பாக்க மாட்டான்… அவ்வளவு கவுரவமா நடந்துக்குவாங்க… இங்க எல்லாரும் மொட்டை பயலுகளா இருக்கானுங்க… ஒருத்திய மூணு பேரு போட்டு செய்யறானுங்க….த்தூ எந்திரி மாமா.. ஊருக்கு போயி பேச்சியம்மன் ஆத்துல குளிச்சிருவோம்… எல்லாம் சரியா போயிடும்..” என்று மாமாவை ஏக்கத்தோடு பார்த்தாள். அதன் நீட்சியில்…”நான் செத்தரவா மாமா…” என்ற சொல் தொண்டைக்குள் கையேந்தி கதறியது. வாயை பொத்தி கண்ணீரை துடைத்த போது வாய் கோணி கண்ணீர் தகித்தது ரத்னாவுக்கு.

கொஞ்சம் நேரம் அங்கே பேச்சில்லை யாரிடமும். அமைதியாய் எதோ என்னவோ தன்னை ஆக்கிக் கொள்ள முயலுவது போல ஒரு பேரமைதி.

நெஞ்சத்தில் குருதி ததும்ப… அதே பெட்டிக்கடையில் பன்னு வாங்கி டீயில் தொட்டு தின்கிறார்கள்.

“எப்பிடியாவது பொழைச்சு…. இருக்கற வாழ்க்கைலருந்து வேறொரு வாழ்க்கையை புடிச்சர்னுனுதான இத்தனை தூரம் வந்து தனியா ஆக்கி தின்னுகிட்டு… ராத்திரி பகல்னு பாக்காம பைக்கு கம்பனில வேலை பாக்குறது. இப்பிடி போட்டு ஒண்ணுமில்லாம பண்ணிட்டானுங்களே… இல்ல….. ஏதாவது பண்ணனும் புள்ள” என்றவன் கடைசி வாய் பன்- ஐ வேகமாய் மென்றான். அவன் கண்களில் பெரும் அமைதி சுழன்றது.

“தம்பி அவுங்கள ஒண்ணுமே பண்ண முடியாது… இன்னும் இங்க தான் இந்த புள்ள சுத்திகிட்டுருக்குன்னு தெரிஞ்சா மறுபடியும் ராத்திரிக்கு தூக்கிட்டு போய்டுவானுங்க.. சில காரியங்கள விட்டு நாம தான் ஒதுங்கிக்கனும் தம்பி… இல்லாதவன் சத்தம் காட்டக்கூடாது… வேற என்ன பண்ண. நம்ம நியாயம் தர்மம் எல்லாம் அவுனுங்கள ஒன்னும் பண்ணாது. பொறுக்கிங்க… கொலை பண்ண கூட தயங்க மாட்டானுங்க… பேசாம ஊர் பக்கம் போய் சேருங்க…” கடைக்காரர் கடைவாய் பல்லுக்கும் கேட்காத சத்தத்தில் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

பசி கொஞ்சம் தீர்ந்திருக்க… பொதுவாக ஓர் ஆசுவாசத்தை எழுந்து நின்று சடவெடுத்து கண்டாள். அதே நேரம் அனிச்சையாக இடது பக்கம் நகர்ந்திருந்த சுடிதார் பேண்ட்டின் முனையை.. கையை வயிறு பக்கம் நகர்த்தி இழுத்து தொப்புளுக்கு நேராய் நிறுத்தி நாடாவின் முடிச்சை இன்னும் இறுக்கினாள். கசங்கி சுருங்கி அழுக்கேறி இருந்த மேலாடையை சுருக்கு நீக்குவது போல சரித்து…. அழுகை தட்டி விட்டு ஒரு மாதிரி சரி செய்து கொண்டாள். கூந்தலை அவிழ்த்து மீண்டும் இறுக்கி கட்டிக் கொண்டாள்.

“இல்ல கிளம்பு…. போயி கேட்ருவோம்..” என்று இன்பாவின் கையைப் பற்றி தீர்க்கமாய் இழுத்தான். அவனால் ஏதாவது செய்யாமல் இருக்க முடியவில்லை. உள்ளேயும் வெளியேயும் தொடர் அனல் காற்று.

“தம்பி… வேண்டாம்… உசுராவது மிஞ்சும்… போய்டுங்க… ரெம்ப மோசமானவனுங்க…” என்றார் பெரியவர். அவர் இம்முறை தலையை கடையை விட்டு சற்று வெளியே நீட்டி இருந்தார். அவர் கண்களில் காலத்துக்கும் சேர்ந்திருந்த பயம்.

“என்னங்கய்யா பேசறீங்க… இதுவே உங்க வீட்டு புள்ளைக்கு நடந்தா இப்டி தான் பேசுவீங்களா….. நாலு பேரு போய் கேக்க மாட்டிங்களா… ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா…!” ஓடி வந்து மூச்சிரைக்கும் ஒரு பசித்த சிறுவனைப் போல அழுதான்.

“இப்ப எதுக்கு நீ அழுதுட்டுருக்க.. நான் என்ன செத்தா போய்ட்டேன்…” பேசிக்கொண்டே அவளும் அழுதாள். சத்தமில்லாமல் ஓர் ஒப்பாரி அங்கே சாவுக்கு ஏங்கியது.

அவர்கள் அழுகையை சற்று ஆழமாய் பார்த்த கடைக்காரர் அருவியில் இருந்து எட்டி குதித்தவர் போல… அமைதியில் இருந்து எதையோ அறுப்பது போல….” எங்க வீட்டு புள்ளைய கூட ஒரு ராத்திரி தூக்கிட்டு போய்….” பெரியவர் விசும்பினார். திகைத்து அவரையே இருவரும் பார்த்தார்கள். அவர்களின் அழுகைக்கு மறதி நிம்மதி சில நொடிகளுக்கு.

“போலீஸ் கேஸ் வாபஸ் வாங்கலனா…. என் பொண்டாட்டியையும் தூக்கிட்டு போய்டுவோம்ன்னு சொன்னானுங்க. குடிச்சிட்டு விழுந்து கிடந்தா என் புள்ள வேற ஒன்னு இல்ல.. இனி கண்டிச்சு வளக்கறேன்னு சொல்லி மூடிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். நாமெல்லாம் அண்டி பொழைக்கற ஆளுங்க தம்பி… மூடிட்டு தான் இருக்கணும்…” என்ற கடைக்காரரின் வாய் பேசி முடித்த பிறகும் சொற்களில் உழன்று கொண்டிருந்தது.

“அண்டி பொழைக்கறவன்னா அடிமையா அய்யா… இதுவே அவன் வீட்டு புள்ளய யாராவது இப்பிடி பண்ணினா… அவன் ஒத்துக்குவானா… இப்பிடியே விட்டா யார் தான் இதை கேக்கறது.. இல்ல புள்ள வா.. போய் கேட்ருவோம்.. என்ன ஆகுதுன்னு பாத்துடுவோம்.. மனசு அப்ப தான் ஆறும்…” என்று அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் ரத்னா.

“கார் பைக் தயாரிக்கற ஏரியா இது. காரோட காரா பைக்கோட பைக்கா எல்லாருமே இங்க எந்திரங்க தான்ன… இந்த பையன் வேற சொல்ல சொல்ல கேக்காம போறானே… கொன்னு பின்னால இருக்கற தோட்டத்துல புதைக்க போறாங்கனுங்க…” முனங்கி கொண்டே கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டார்.. ஒரு கை அற்ற அந்த கடைக்காரர்.

*

“ஸ்ஸ்ஸ்…. சத்தம் போடாத.. அதுக்கு தான் காசு குடுத்தேனே.. பெரிய பருப்பு மாதிரி தூக்கி வீசிட்டு போய்ட்டா…” என்று சொற்களை ரத்னாவுக்கு வீசி விட்டு பார்வையை இன்பலட்சுமி மீதி சிதற விட்டான்.. பொறுக்கி. நாக்கு ஒரு முறை வாயில் பாம்பு விஷத்தை தடவியது.

“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்பிடி பண்ணி இருக்கீங்க… காசு குடுத்தா சரியா போய்டுமா…” பேசிக்கொண்டே சட்டென முன்னேறி பளாரென ஓர் அறை வைத்தான் ரத்னா.

திக்கென்று கண்களில் பொறி கலங்க… பார்த்த பொறுக்கி… “அடிங் கொம்மா.. எங்க வந்து யார் மேல கை வைக்கற…!” என்று எகிறி ரத்னாவின் நெஞ்சிலேயே ஓங்கி உதைத்தான். உதைத்த மறுகணம் ரத்னா சுருண்டு விழுந்து வயிற்றை பற்றிக் கொண்டு துடிக்க….” டேய் பொறுக்கி உன்ன என்ன பண்றேன் பாரு…” என்று தலையை குனிந்து கொண்டே அவனை நோக்கி முன்னேறி முட்டி தள்ளினாள் இன்பா. அதே கணம் திரும்பி ஓடி வந்து மாமாவை தொட்டு… என்னாச்சு மாமா.. எழுந்திரு.. எழுந்திரு என்று கத்த கத்தவே முட்டியதில் சரிந்து சுவரில் சரிந்த பொறுக்கி….. தடுமாறி எழுந்து வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு….” என்ன தைரியம்… கொன்னு போட்டர்றேன் பாரு…”முனங்கியபடியே நாக்கை கடித்துக் கொண்டே முன்னேறி வந்து இம்முறை அவள் முதுகில் திம்மென உதைத்தான்.

குப்புற விழுந்தவளுக்கு முன் பற்கள் தெறித்து விட்டன. சூடான ரத்தம் வாய் நிறைந்து வார்த்தைகளை துப்பியது.

“மாமா மாமா… போயிரலாம் போயிரலாம்…” என்று கத்த கத்தவே கையை ஊன்றி சுவர் பற்றி மூச்சை பிடித்துக் கொண்டு எழுந்த ரத்னாவின் கையில் அங்கு இருந்த பூந்தொட்டி ஒன்று வாகாக மாட்டியது. எடுத்த வேகத்தில் பொறுக்கியின் கால் முட்டியில் சாத்தினான். ஒரு கணம் நிலை தடுமாறிய பொறுக்கிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. முட்டியில் இருந்து ஒழுகிய ரத்தம் அவனை பதற வைத்து விட்டது. காலை தரையில் ஊன்ற முடியாமல் நொண்டி நொண்டி அங்கும் சுதாரித்து கொண்டே இம்முறை இன்னமும் மூர்க்கமாக கோபம் தறிகெட்டு தலைக்கேற… ரத்னாவின் கையை சுழற்றி பிடித்து முறுக்க… அதே நேரம் தடுக்க வந்த இன்பாவின் முகத்தில் தொடர்ந்து நாலைந்து அறை அறைந்தான். கை கலப்பில் அவனோடு மல்லுக்கு நிற்க… அவன் கைக்குள் இன்பாவின் விரல்கள் மாட்ட.. அதை அவன் வெறி கொண்டு மடக்கி திருப்ப.. ஒரு விரல் உடைந்த சத்தம் பட்டீரென்று அவளை குரலற்று வாய் திறந்து கதற வைத்தது. ஆவென திறந்த வாய் மூடுவதற்கு நேரம் பிடித்தது. மூச்சு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வராமல்.. ஒரு பிரமை பிடித்த வலி தேர்ந்த சூடு அவள் முகத்தில் கொப்பளித்தது.

தொண்டைக்குள் எழும்பிய கதறல்.. தூரத்தில் எங்கோ ரயிலில் மோதுவது போல இருந்தது. கண்களை கட்டிக் கொண்டு தலை சுற்றி… தடுமாற செய்ய… கையை தொங்க போட்டுக் கொண்டே முன்னேறிய இன்பா… அவன் மேல் தாவி விழுந்து பிராண்டி… அவன் தொடை சரியாக வாயில் மாட்டி கொள்ள… கடிக்க ஆரம்பித்து விட்டாள். பற்கள் செதுக்கிய வட்டத்தில்… பர பரவென தொடையில் இருந்து எழும்பிய பெரும் வலி… பல்லு பல்லாய் விஷம் ஏறுவது போல உடம்பில் சுழல ஆம்பிக்க… வலி தாங்காமல் ரத்னாவின் கையை அனிச்சையாக விட்டு விட்ட பொறுக்கி…கடிபட்ட இடத்தை விடுவிக்க முழு பலத்தையும் கொண்டு அவள் தலையைப் பிடித்து தள்ள வேண்டி இருந்தது. தலை முடியை கொத்தோடு பற்றி இழுத்து ஆட்டி அவள் கவனத்தை திசை திருப்ப.. தலையில் வலி தாங்காமல் எச்சில் வழிய பின்னோக்கி சரிந்து விழுந்தாள்.

ஒரு கரப்பானின் கடைசி நொடியை அந்த அறையில் அங்கும் இங்கும் சூடு பறக்க சுழல விட்டான் பொறுக்கி. அதே நேரம் வேகமாய் பொறுக்கி தலை முடியை பற்றி கீழே சரித்து தள்ளி சாய்த்து… அவன் முதுகில் இடுப்பில் சரமாரியாக மிதித்தான் ரத்னா. ஒவ்வொரு மிதிக்கும் ஒரு சொல் சொல்லொணா வார்த்தையில் வந்து கொண்டிருந்தது. தூ தூவென துப்பிக்கொண்டே இருந்தது அவன் வாய். ஆனாலும் திமிறி எழுந்த பொறுக்கி கிறுக்கு பிடித்தவன் போல உடம்பை அலசிக் கொண்டு எதிர் தாக்குதல் செய்ய… கன்னம் கிழிந்து உதடு பிளந்து ரத்தம் கொட்ட தடுமாறி சுவரோரம் சரிந்தான் ரத்னா.

“என்ன….. என்னவோ சத்தம்….! என்பது போல மெல்ல வீட்டுக்குள் நுழைந்த இன்னொரு பொறுக்கி.. வீட்டுக்குள் நடக்கும் விபரீதத்தை புரிந்தும் புரியாமலும்.. “ஐயோ அண்ணே… அண்ணே என்னாச்சு… அண்ணே…”- கத்திக் கொண்டே அவர்களை நோக்கி ஓடி வந்து பொறுக்கியை தாங்கி பிடித்து… நிலைமையை புரிந்து கொண்டான். அவன் கண்கள் எதிரே நின்றிருந்த இருவர் மீதும் வெஞ்சினத்தோடு விஷத்தை கக்கியது.

“பசங்கள எங்க….?” என்று சூட்டோடு சூட்டாக கேட்க… “அம்மா வந்துருக்குன்னு நீங்க தான வீட்டுக்கு போக சொல்லீட்டிங்க… இதுங்க ரெண்டுக்கும் பசங்க வேணுமா… நான் போதாதா… விடுங்கண்ணே ” என்று அவர்களை நோக்கி வேகமாய் எழுந்து முன்னேறியவன்… இருவரையும் மாறி மாறி அடித்து உதைத்தான்…

“எங்க வந்து யார் மேல கை வெச்சிருக்கீங்க… சாவடிக்காம விட மாட்டேன்..”

மிருகத்தனமான தாக்குதல். அதற்குள் கொஞ்சம் ஆசுவாசம் பெற்று விட்ட பொறுக்கி நம்பர் ஒன் “இதுங்களை பொறுமையாக ஆற அமர அடிச்சே கொல்லனும்…” என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்து காயத்தை துடைத்துக் கொண்டிருக்க… கண் இமைக்கும் நேரம் தான் நேரம் கூடவும் அதே நேரம் குறையவும். உடைந்த விரலோடும்.. மூட்டு நகர்ந்த காலோடும்.. தலை உடைந்து வழியும் ரத்தத்தோடும்.. பல் உடைந்த வாயோடும்…. கன்னம் பிய்ந்த… மூக்குடைந்த…. கழுத்து வீங்கிய என்று இன்பாவும் ரத்னாவும்… உள்ளத்தின் பலத்தின் உண்மையின் தீவிரத்தின்… தங்களின் வாழ்க்கையை இழுத்து மூச்சு சேர்த்து தம் கட்டி… பொறுக்கி நம்பர் டூவை கீழே தள்ளி கட்டி புரண்டு.. மேலேறி அமர்ந்து ரத்னா கழுத்தை நெறிக்க அதே நேரத்தில் இன்பா அவன் காதை கடித்து எடுத்து விட்டாள். எல்லாம் மறந்து கேட்பதெல்லாம் குருதி வழியும் குழாய் தான் போல… ஆஅஹ்வென காதை பிடித்துக் கொண்டு சுழல மறந்த பூமியை தலை மேல் வைத்து சுருண்டு விட்டான்… பொறுக்கி நம்பர் டூ.

விபரீதம் உணர்ந்த நம்பர் ஒன் பொறுக்கி ரத்னாவின் வலது காலை…படுகெட்டியாக பற்றி தர தரவென இழுக்க… அவன் கைகள் நம்பர் டூ பொறுக்கியின் கழுத்திலிருந்து விடுபட்டு… ஏதொன்றை பிடித்துக் கொள்ள பரபரவென அங்கும் இங்கும் தரையில் அடித்து பிராண்ட….நகம் உடைந்து… உள்ளங்கை கீறி…. குருதி கொப்பளிப்புகள் கூடவே கொந்தளிப்புகள். அதற்குள் பிடித்திருந்த காலை… பலம் கொண்டு திருப்பி மூட்டு- ஐ நகர்த்தி இருந்தான். மூச்சில் பாம்பு கொத்தியது போல வலி ரத்னாவுக்கு. கத்தினான். காதுக்குள் இருக்கும் வாயில் பற்கள் நெறிபடும் சத்தம் மூளையின் மூலையில். அதே புள்ளியில்… காலத்தை நிறுத்தி பொறுக்கி நம்பர் ஒன் மீது கொய்யா மரத்தில் ஏறுவது போல ஏறி பரபரவென அவன் கண்ணுக்குள் விரலை விட்டு நண்டு பிடி போட்டு விட்டாள் இன்பா. அழுத்த அழுத்த… கண்ணுக்குள் இருக்கும் சிவப்பு தோல் பிதுங்கி… கண்ணில் நீர் கொட்ட… அந்த பக்க கன்னமே காய்ந்து உதிர்வது போல காட்டு வெயிலின் தகிப்போடு தடுமாறி பலம் இழந்து… ரத்னாவின் காலை விட்டு விட்டு பரபரவென பின்னால் ஒரு பைத்தியக்கார அசைவோடு தெறித்து விழுந்து தடுமாறினான்.

கண்ணை அழுந்த பிடித்துக் கொண்டு மேலே விழுந்து கிடக்கும் இன்பாவையும் பிடித்துக் கொண்டு… உடல் நடுங்க… வேர்த்து பூத்த பூதம் போல கிடந்தவனை தலை மயிரை கொத்தாக பிடித்து இழுத்து புடுங்கினான் ரத்னா. நிற்க முடியாத வேதனையிலும் உள்ளே புகுந்த கொண்ட கடவுளின் ஆட்டம்… நிலை கொள்ளவில்லை. சாது மிரண்டால்.. சாத்தான் ஆகும் என்பது காண கிடைத்த காட்சி. பயம் நிரம்பி தன்னை வியர்த்துக் கொட்டிய அந்த அறை முழுவதும் ரத்த சகதியில். சாத்திரம் மாற்றிக் கொண்டிருந்தது காலம்.

பிய்ந்த காதை பிடித்துக் கொண்டு மயங்கி கிடந்தவன் மண்டை மீது ஒரு ஏறு ஏறி இறங்கிய இன்பா பாதி பிசாசாக தெரிந்தாள். உடம்பில் எங்கெல்லாம் எதுவெல்லாம் உடைந்ததோ… ஆனாலும்… வேகம் குறையவில்லை. மரண வேகத்தில் மண்டை நிறைய மத்தள சத்தம்.

என்ன நடக்குது என்று மாடியில் இருந்து மெல்ல இறங்கி கொண்டிருந்த பொறுக்கியின் தாய்… வெள்ளாடையில்… வெண்மேகம் போல மிதந்து வருவதாக வந்தது.

சலனமில்லாத பார்வையில்…. ஒருகணம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த சண்டை நின்றது.

எல்லார் பார்வையும் ஒரு புள்ளியில் குவிந்து விலகியது. நீ உள்ள போம்மா என்பதாக கை ஜாடை செய்தான் பொறுக்கி நம்பர் ஒன். எல்லாம் அறிந்த தாய்க்கு சொல்லாமலே புலப்பட்டு விட்டது. இன்னும் எத்தனை பாவத்தை சுமப்பது போல கவலை சிமிட்டி பார்த்தாள்

மீண்டும் கையில் கிடைத்த இன்னொரு பூந்தொட்டியை எடுத்து அவன் பின் மண்டையில் இறுக்கி சாத்தினான். நின்றிருந்த சண்டையை மீண்டும் தொடங்கிய புள்ளியில் சரியத்தான் முடிந்தது பொறுக்கிக்கு. அவன் தலை குப்புற விழுந்து கண்கள் நடுங்க பார்த்தான். வழக்கத்துக்கு மாறாக தன் பிள்ளை அடி வாங்கி சரிந்து கிடந்த காட்சியை அந்த தாய் வெறித்து பார்த்தாள். கொஞ்சம் சிரித்தது போல தான் இருந்தது.

வெறித்த வெஞ்சினம் கசிந்த பார்வையில்…விறு விறுவென அந்த தாயை நோக்கி ஓடிய இன்பா… நொடியில் அவளை மாடி படியில் இருந்து இழுத்து கீழே வீசினாள். பட் பட்… பட் பட் …. பட் பட் ….. பட் பட் ….. பட் பட்…என தலை படிக்கட்டில் பட்டு கீழே வருகையில் ரத்தம் பீய்ச்சி அடித்தது.

அவன் வேண்டாம் என்பது போல ஜாடை செய்ய செய்ய… அவனை பார்த்துக் கொண்டே ரத்னா… அந்த அம்மாவின் மீதேறி அமர்ந்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான்.

பொறுக்கியின் நகர முடியாத உடல் நடுங்கியது. நேற்றிரவு இன்பாவை அம்மணமாக கட்டி வைத்து புணர்ந்த காட்சி ஒரு கணம் பெரும் பாறாங்கல்லாய் அவன் தலை மேல் இறங்கியது. கண்களில் வழிந்த ரத்தம் முழுக்க பாவம். உதறி உதறி நடு ஹாலில் கால்களால் காலத்தை நிறுத்த போராடும் அந்த தாயின் கால்களை அழுந்த பிடித்துக் கொண்டு கண்கள் விரிய பார்த்த இன்பா…. கூந்தல் அவிழ்ந்து ஒரு யட்சியை போல தெரிந்தாள். தாயின் மரணத்தை இத்தனை பெரிய புடுங்கியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற இயலாமையில் ஒரு செத்த பாம்பை போல அந்த பொறுக்கி வெறுமனே பார்த்தான். அவன் கண்களில் குருதி தாண்டி கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ஸ்தம்பித்தலின் வழியே நகரமுடியாத நடுக்கத்தை கெஞ்சி கெஞ்சி கொட்டினான்.

“ஒண்ணுல்லாதவனை என்ன வேணாம் பண்ணலான்னு நினைக்கற உன்ன மாதிரி பொறுக்கிகளோட நினைப்புக்கு இந்த பலி தான் பதில். சாவு தான்டா பெருசு.. அதுக்கே நாங்க தயாராகிட்டோம்… அப்புறம் என்ன.. வர சொல்லு…..கூலிக்கு கொல பண்ற உன் எல்லா நாய்களையும் வர சொல்லு… பாத்தர்லாம்…… முடிஞ்சளவு கொன்னுட்டு தான் சாவோம்…” என்ற மாமாவை இறுக கட்டி கொண்டு முத்தமழை பொழிந்தாள் இன்பலட்சுமி.

கோபம் கோபம் கோபம்… தீரா கோபத்தின் வேகம் அந்த வீட்டை அடித்து நொறுக்கியது. பொறுக்கி கீழே கிடந்து மூச்சு வாங்க பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் வேறு வழியே இல்லாத மரண பயம். மௌனத்தில் ஒன்றுமில்லாத பிணத்தை தன் மீது சுமப்பது தான் சரி என்பது போலவே கிடந்தான்.

அவன் அருகே சென்று அவனையே உற்று பார்த்த இருவரும் தூவென துப்பினார்கள்… “த்தூ பொறுக்கி…”

பல்லு போயி… விரல் உடைந்து…கன்னம் பிய்ந்து… மண்டை உடைந்து ரத்தத்தில் நனைந்திருந்த இருவரும் ஒருவருக்கொருவர் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டே நொண்டியபடியே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அவர்கள் ஒரு போர்க்களத்தில் இருந்து வெளியேறினார்கள். இனி என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் கோபத்தை அவர்கள் தக்க வைத்திருப்பார்கள். அவர்கள் போன திசை நோக்கி ஒற்றை கையால் கும்பிட ஆரம்பித்திருந்தார் பெட்டிக்கடைக்காரர். இன்னும் அனல் காற்று ஓய்வதாக இல்லை.

– கவிஜி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More