யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பரீட்சையை ஒத்திவைத்த காரணத்துக்காக விசாரணைகளை நிறைவடையும் வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த துறைத்தலைவர், மூத்த விரிவுரையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரை பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக தண்டனையுடன் மீளவும் சேவையில் இணைப்பதற்கு பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.
விசேட பேரவைக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர்களுக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் பரீட்சை நடைபெறும் என்று திகதி குறிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய தினம் வினாத்தாள் தயார் செய்யப்படாததால் பரீட்சை நடைபெறவில்லை. இது தொடர்பில் மூதவையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பேரவையால் இருவர் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக்குழு கடந்த வாரம் வரை விசாரணைகளை மேற்கொண்டு பேரவைக்கு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், விடயங்களை ஆராய்ந்த பேரவை பரீட்சைக் கடமைகளில் தவறிய காரணத்துக்காகப் பல்கலைக்கழக நடைமுறைகளின்படி குறிப்பிட்ட காலத்துக்கு பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குச் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களுக்குத் தடை விதித்ததுடன், நிர்வாகப் பதவிகளில் தெரிவு செய்யப்படுவதற்கும் கருத்திற்கொள்ளக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்படலாம் எனவும் பேரவை பரிந்துரைத்துள்ளது.