உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் நடைமுறையின் கீழ் வழக்குத் தொடருமாறு கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் தலைமையகப் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன மற்றும் சிசிர மெண்டிஸ் ஆகியோர் மீது குற்றவியல் நடைமுறைகளின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டுமென திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
“உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட இழப்பீடுகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்த மாட்டோம், எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக முழு உண்மையைக் கண்டறியும் எங்கள் முயற்சிகளைத் தொடருவோம். இந்தத் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே, அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்” – என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.