மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தை மீள வசூலிப்பதற்காக இருவரை அடித்துத் துன்புறுத்தும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தக் காணொளிகளில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்குப் பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்று கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்ற இருவரைத் தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காட்சிகள் அந்தக் காணொளிகளில் காணப்படுகின்றன.
இந்தக் காணொளிகள் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடத்துவர்களைக் கைது செய்தற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தக் காணொளிகளில் உள்ளவர்களை இனங்காண்பதற்குப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார், இது தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கோ தகவல் தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் பொலிஸார் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.