காலைப்பொழுது விடிந்து பன்னிரண்டு மணியாகியும் கதிரவனின் ஒளியின்றி மார்கழி மாத குளிரில் மப்பும் மந்தாரமுமாய் காட்சியளித்தது லண்டன். பனியின் குளிர் உடலை ஊடுருவியது. தடித்த குளிர் உடுப்புகள் போட்டிருந்தாலும் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் குளிரையும் தாங்கமுடியவில்லை.
விடிந்தும் அறையை விட்டு வெளியே வராமல் கட்டிலோடு கட்டிலாய் ஒடுங்கிப் போய் படுத்திருந்த ரேவதியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஜீவா எங்களை விட்டுப் போனதை என்னாலேயே தாங்க முடியவில்லை. அவனே உலகம் என்று இருந்தவளுக்கு அவன் பிரிவு இடியாய்த் தாக்கி படுக்கையில் விழுத்தி விட்டது. இரண்டு கிழமையாகியும் பழைய நிலைமைக்கு வரமுடியவில்லை.
“எழும்பு ரேவதி எவ்வளவு நேரம் இப்பிடியே படுத்திருப்பாய். முகத்தைக் கழுவி சாப்பிட வா”
திரும்பி என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.
“வா ரேவதி எழும்பு” குரலை உயர்த்தினேன்.
“என்னை விட்டிட்டுப் போக அவனுக்கு எப்பிடி மனம் வந்தது. அம்மா எண்டு என்ர பிள்ளை எனக்குப் பின்னால திரிஞ்சவன் என்னை விட்டு போயிற்றானே”
“இதை எத்தனை தடவை சொல்லுவாய். கவலைப்பட்டு அழுகிறதால போனவன் வந்து இருக்கப் போறானே. ஓயாமல் அழுது உடம்பைக் கெடுத்துக்காத”
“ஏன் அப்பிடிச் செய்தான். என்னை விட்டு போகமாட்டானே… ஏன் போனான்”
குழந்தைத்தனமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது.
“சிறகு முளைச்சால் பறக்கத்தானே செய்யும். அவன்ர வாழ்க்கை அவன்ர சந்தோஷமெண்டு போயிற்றான். எங்கட பிள்ளைதானே சந்தோஷமாய் இருக்கட்டும் நீ எழும்பு”
“எங்களை விட்டுப் போறதுக்கா அவன்மேல உயிராய் இருந்தன். இந்த வீட்டை அவன் விருப்பப்படி பார்த்து பார்த்து கட்டினேன். சின்ன வீட்டில இருந்தபோது கூட அவனுக்கு ஒரு குறையுமில்லாமல் எப்பிடியெல்லாம் வளர்த்தன். ஏன் எனக்கு சொல்லாமல் எல்லாம் செய்தான். எனக்கு ஒண்டும் தெரியாதே” புலம்பியவளைப் பார்த்தேன்.
பிள்ளைக்காக எத்தனை பேரை உதாசீனப்படுத்தி அவர்களின் மனங்களை நோக வைத்திருக்கிறாள். அந்த நேரங்களில் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாளே…
திருமணமாகி எட்டு வருடங்கள் குழந்தையில்லாமல் ஏங்க வைத்துப் பிறந்தவன் ஜீவா. ரேவதி அவனை கண்ணுக்குள்ளேயே வைத்திருந்தாள். வருமானம் குறைவாய் இருந்த அந்த நேரத்திலும் அவனுக்கு வாங்குவது எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள்தான். அவன் பிறந்த நேரம் உதவிக்கு கொழும்பில் இருக்கும் ரேவதியின் அம்மாவை கூப்பிடும்போது நானும் கிளிநொச்சியில் இருக்கும் அப்பா அம்மாவை வரவழைத்து எங்களோடு சில மாதங்கள் வைத்திருக்க வேணும் என்று விரும்பினேன். ஒற்றைப் பிள்ளையாய் பிறந்ததினால் அவர்களின் உலகம் நானாயிருந்தேன். திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் வருடங்கள் தள்ளிப் போகப் பேரக் குழந்தைகளுக்காக ஏங்கியவர்கள். ரேவதி குழந்தையைச் சுமக்கிறாள் என்று அறிந்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்.
“கோயில்களுக்கு நேர்த்தி வைச்சு இண்டைக்கு போய் அர்ச்சனை செய்தனான். ரேவதியை கவனமாய் பார்த்துக்கொள். ஆசைப்பட்டதை வாங்கிக்குடு தம்பி”
குழந்தையின் வளர்ச்சியையும் அதன் அசைவுகளையும் ரேவதியுடன் கதைப்பாள்.
பிரசவ நேரம் நாங்களும் வாறம் கூப்பிடுற அலுவல்களைப் பாருங்கோ என்பாள்.
“முதல் அம்மா வரட்டும் பிறகு மாமா மாமியைக் கூப்பிடுவம். இரண்டு அறையுள்ள வீட்டில வந்து நிக்கிறதும் கஷ்டம் காசும் வேணும்”
ரேவதி சொல்வது சரியென்று பட்டது. பிறகு கூப்பிடுவதாகச் சொன்னாலும் அதிகரித்து வரும் செலவுகளால் முடியவில்லை.
நாங்கள் போனால் எல்லோரையும் பார்த்துக் கொண்டு வரலாம் என்று மூன்று வயது ஜீவாவோடு கொழும்புக்குப் போனோம். ரேவதியின் வீட்டில் ஒரு கிழமை நின்று விட்டு கிளிநொச்சிக்குப் போக ஆயத்தமானோம்.
“ஊரில நுளம்பு குத்தி காய்ச்சல் வந்தால் என்ன செய்யிறது. பிள்ளையோட போக பயமாயிருக்கு. நாங்கள் போக வேண்டாம். மாமா மாமியை கொழும்புக்குக் கூப்பிடுவம்”
“தேவையான மருந்துகளோடதானே வந்திருக்கிறம்”
“போறது பயம் எண்டு அம்மா சொல்லுறா”
“இவ்வளவு தூரம் வந்திட்டு ஊருக்குப் போகாமல் போறதே எங்கட முருகன் கோயிலுக்கும் பிள்ளையோட போக வேணும்”
கோயில் என்றதும் வந்தாள். எங்களைப் பார்த்ததும் அப்பா அம்மாவின் பரபரப்பையும் ஜீவாவைத் தூக்கி வைத்து கொண்டாடியதையும் கோயில்களுக்கு அழைத்துப் போவதையும் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
மருந்து பூசி நுளம்பு வலைக்குள் படுத்திருந்தாலும் நுளம்பு குத்தி சில இடங்கள் சிவந்து கொப்புளங்கள் வர ரேவதி பயந்துவிட்டாள். அழும் ஜீவாவை சமாதானப்படுத்த முடியாமல் ஐந்தாம் நாளே கொழும்புக்குப் போக அடம்பிடித்தாள்.
“மருந்து பூசினால் சுகம் வந்திடும். வந்தனாங்கள் இன்னும் ஒரு கிழமை இருந்திட்டுப் போவம்”
“உங்களுக்கு நுளம்புக்கடி பழக்கம். என்னால தாங்கேலாமல் இருக்கு கடிச்ச இடம் விறுவிறுக்குது. சின்னக்குழந்தை தாங்குவானே வாங்கோ போவம்”
அடுத்த நாளே கொழும்புக்கு வந்து விட்டோம். அங்கு நின்ற ஒரு கிழமையில் மருந்து பூசி காயங்கள் ஆறிவிட்டது. லண்டன் வந்ததும் ஓடியாடி விளையாடத் தொடங்கிவிட்டான்.
“ஜீவாவை இனி கொண்டு போறதில்லை போனாலும் கொழும்புக்கு மட்டும்தான் போறது. அவனைப் பார்க்கிறதெண்டால் அங்க வந்து பார்க்கட்டும்”
“நுளம்புக்கடிக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுறாய். அம்மா அவனைப் பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டா. ஒரு கிழமை கூட நிற்கேல”
“அஞ்சு நாளெண்டாலும் தூக்கி வைச்சு கொஞ்சினவைதானே”
புறப்படும்போது அவர்கள் ஏக்கத்தோடு ஜீவாவைப் பார்த்த பார்வை கண்ணுக்குள் நிழலாடியது.
ஜீவாவுக்கு ஐந்து வயது நெருங்கிக் கொண்டிருந்தது.
“அஞ்சாவது பேர்த்டே முடிய மற்ற அறையை அவனுக்கு ஒழுங்கு பண்ணிக் குடுப்பம். தனிய படுத்து பழகட்டும்” என்றாள்.
“அவன் குழந்தை. தனியப் படுப்பானே புதிசாய் பிரச்சனையைத் தொடங்காத”
“இங்க வெள்ளையள் எல்லாம் சின்னனிலையே தனிய விட்டுப் பழக்குதுகள். முதல் படுக்க அழுதாலும் பிறகு பழகிடுவான். தைரியமாய் வளரட்டும்”
“பழக வேணும் எண்டால் எங்கட அறையில தனியப் படுக்கவிடு. பிறகு தனியறையில விடலாம். லண்டனில இருந்தால் அவங்களைப் போல இருக்கோணுமே” கத்தினேன்.
அடுத்தநாள் நான் வேலையால் வந்தபோது மற்ற அறை வெறுமையாக இருந்தது. அதிலுள்ள பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டாள்.
“அவனுக்கு கட்டில், சின்ன மேசை கதிரை வாங்கவேணும் அறைக்கும் பெயிண்ட் அடிச்சு ஒரு பக்கச் சுவருக்கு கார்ட்டூன் கீறி அவனுக்கேற்றதாய் மாத்தவேணும்”
என் சம்மதத்தை எதிர்பார்க்காமல் அறை வேலைகளை முடித்து தேவையான பொருட்களையும் வாங்கி பிறந்தநாளன்று அறைக்குள் படுக்க வைத்தாள். அழும்போது தானும் போய் படுத்து விரைவிலேயே தனியப் படுக்க பழக்கி விட்டாள்.
ஒரு வயதிலேயே குழந்தை காப்பகத்தில் கிழமையில் மூன்று நாட்கள் விட்டாள். தடுமாற்றம் இல்லாமல் கதைக்க வீட்டிலும் ஆங்கிலத்திலேயே அவனுடன் கதைத்தாள். ஐந்து வயதில் அவர்களைப் போல தோள் குலுக்கி கதைப்பதும் சாப்பிடுவதும் அவனுக்கு பழகிவிட்டது. அவனின் மழலை கதைகளைக் கேட்க எனக்கும் சந்தோஷமாக இருந்தது.
தமிழ் படிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் தமிழ் பாடசாலைக்கு விடுவது பற்றி ரேவதியோடு கதைத்தேன்.
“அதெல்லாம் வேண்டாம். தமிழ் படிக்கிறது கஷ்டம். அவனுக்கு இங்கிலீஷ் மட்டும் போதும். அவனைக் கஷ்டப்படுத்த வேண்டாம்” என்றாள்.
“எங்கட மொழியைப் படிக்கிறது கஷ்டமோ. அவனுக்குத் தமிழ் தெரியவேணும். ஊருக்குப் போனால் தமிழ் தெரியாமல் திண்டாடுவான். வெளிநாட்டு மோகத்துக்கும் ஒரு அளவு இருக்கு”
கோபப்பட்டாலும் கேட்கவேயில்லை. அவனுக்கும் தமிழ் கதைக்க ஆர்வம் வரவில்லை. நான் தமிழில் கதைத்தால் பாதி விளங்கி ஆங்கிலத்தில் பதில் சொல்லுவான்.
“அப்பா தமிழ் கதைக்க விருப்பமில்லை” என்பான்.
மற்றவர்களுக்கு முன் அவனுக்கு தமிழே தெரியாது என்று சொல்லிக் கொள்வதில் ரேவதிக்குப் பெருமை.
ஜீவாவைப் பார்க்க ஆசைப்படும் அம்மா அப்பாவை நேரமிருக்கும்போது வீடியோவில் கூப்பிடுவேன். அவன் கதைப்பது அவர்களுக்கு புரியாவிட்டாலும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
“அவன்ர செல்லக் கதைகளைக் கேட்க ஆசையாயிருக்கு வீட்டில தமிழ் கதைச்சால்தானே அவனும் கதைப்பான். நாங்கள் வந்தால் எங்களோட கதைச்சுப் பழகுவான். நீங்களாவது அடிக்கடி இங்க கூட்டிக் கொண்டு வாங்கோ”
போக நான் நினைத்தாலும் ரேவதி சம்மதிக்கவில்லை. வளர வளர அவனின் படிப்பு விளையாட்டு என்று தன் பொழுது முழுவதையும் அவனுடன் செலவழித்தாள்.
பத்து வயதில் பாடசாலைகளுக்கான தேர்வு பரீட்சைக்கு வகுப்புகள் ஒழுங்கு செய்து படிப்பித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் யாரையும் வீட்டுக்கு வர இரவில் தங்க அனுமதிப்பதில்லை. அந்த வருடம் அப்பாவிற்கு ஒரு விபத்து நடந்தது.
“அப்பாவுக்கு கடுமையாம். அம்மா அழுகிறதைப் பார்க்க் தாங்கேலாமல் இருக்கு. ரிக்கற்றைப் போட்டு போவம் ரெடி பண்ணு”
“நீங்கள் போய் பார்த்திட்டு வாங்கோ நானும் ஜீவாவும் வரேல. எக்ஸாமுக்கு ஆறு மாதம்தான் இருக்கு. அவனை இந்த நேரத்தில குழப்பவேண்டாம்”
“இரண்டு கிழமை நிண்டிட்டு வருவம். அப்பா ஜீவாவைப் பார்க்க ஆசைப்படுவார்”
“அவன்ர எதிர்காலம்தான் எனக்கு முக்கியம். அடுத்த வருசம் போய் பார்க்கலாம் நீங்கள் போங்கோ. வீடியோவில வந்து கதைக்கிறம்” பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
என்னைக் கண்டதும் அப்பா சந்தோஷப்பட்டார். வீடியோவில் ஜீவாவைப் பார்த்தாலும் அவனை நினைத்து ஏங்கினார்கள். அவர்களோடு இரண்டு கிழமை நின்று அப்பாவுக்கு சுகம் வந்ததும் அடுத்த முறை எல்லோரும் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன்.
நல்ல ஸ்கூல் கிடைத்து படிப்பைத் தொடர்ந்தான். அவனின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருந்தாள். சிலசமயங்களில் ஓய்வே இல்லாமல் அவன் ஓடித் திரிவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும். சொன்னாலும் கேட்கமாட்டாள். அவன் விஷயத்தில் எல்லா முடிவையும் தானே எடுக்க வேண்டும் என்பாள்.
அடுத்த வீவுக்கு மூவரும் ஊருக்குப் போகலாம் என்று நினைத்தேன்.
“லண்டனையும் ஊரையும் தவிர ஜீவா எங்க போயிருக்கிறான். இந்தமுறை வேற எங்கையாவது போவம் எண்டு அவனுக்குச் சொல்லிட்டன்”
“அவன் வளர்ந்த பிறகு எத்தனையோ நாட்டுக்குப் போகப் போறான். அப்பா அம்மா இருக்கேக்க போய் பாக்க வேணும் இல்லாவிட்டால் அவையளை இங்க கூப்பிட வேணும்”
“இந்த வீட்டில வந்திருக்க வசதியில்ல. வேற வீட்டுக்கு போன பிறகு கூப்பிடலாம். நீங்கள்தான் ஏதாவது காரணம் சொல்லி போறீங்களே”
“நான் மட்டும் போனால் போதுமே. எல்லாரும் போனால்தானே அவையளுக்குச் சந்தோஷம்”
அந்த வருடமும் போகமுடியவில்லை.
வீட்டில் எங்களுக்கும் இடம் போதவில்லை. மூன்று அறையுள்ள ஒரு வீடு வாங்கினோம்.
“வீட்டுக்குப் பக்கத்தில நிறைய இடம் இருக்கு சேர்த்துக் கட்டி வீட்ட பெரிசாக்கலாம்” என்றாள்.
“இப்ப இது போதும். ஜீவாவும் யூனிவர்சிட்டி போறதால படிப்பு செலவுகளையும் சமாளிக்க வேணும்”
“இந்த வீட்டை வித்து கட்டுவம். ஜீவாவுக்குப் பிடிச்சதாய் வசதியாய் அந்த வீடு இருக்க வேணும். பிறகும் அவன் எங்களோடதானே இருப்பான்”
“இந்த வீட்டை வாடகைக்குக் குடுத்தால் எங்களுக்கு ஒரு வருமானம் வரும்”
“நான் நினைச்ச மாதிரி வீடு இருக்கவேணும். இதை விற்பம்”
மனதில் ஒன்று நினைத்து விட்டால் அதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற பிடிவாதம். அவள் நினைத்த மாதிரியே நடந்தது.
ஹோலைப் பெரிதாக்கி பக்கத்தில் குளியலறையுடன் விசாலமான ஒரு அறையும், மாடியில் ஜீவாவின் விருப்பப்படி இன்னொரு அறையும் கட்டி வீட்டுவேலைகள் முடிந்தது. இனியாவது அப்பா அம்மாவை கூப்பிடலாமென்று அவர்களோடு கதைத்தேன்.
“விபத்து நடந்ததிலயிருந்து அப்பாவுக்கு முழங்காலில நோ இருக்குது இப்ப வயசு போக இன்னும் கூடிட்டுது. ஒரு இடத்தில காலை மடிச்சுக் கொண்டு இருக்கமாட்டார் கால் வீங்கிப் போகுது. லண்டன் வர பிளைட்டுல பத்து மணித்தியாலம் எப்பிடி இருப்பார். இனி வாறது சரி வராது தம்பி” என்றாள் அம்மா.
“நான் வந்து கவனமாய் கூட்டிக் கொண்டு வாறனம்மா”
“எங்களுக்கு இனி பயணம் சரிவராதடா. மருந்துகளோட இருக்கிறம். சுகமான நேரம் கூப்பிட்டிருக்கலாம். ஜீவாவும் குழந்தையாய் இருக்கேக்க எங்களோட சேர்ந்திருப்பான் விளையாடுவான். அவனோட பொழுது போகும். இப்ப படிப்பு எண்டு அவனும், வேலை எண்டு நீங்களும் போனால் நாங்கள் வந்து என்ன செய்ய. உங்களுக்கு நேரமிருந்தால் வந்து பார்த்திட்டுப் போங்கோ” அம்மா சொன்னதைக் கேட்டு குற்ற உணர்வால் குறுகிப் போனேன். எங்களோடு வந்திருக்க எவ்வளவு ஏங்கியிருப்பார்கள்.
செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய காலங்களில் செய்யாமல் பின்பு உணர்ந்து வருத்தப்பட்டால் தவற விட்ட காலங்கள் திரும்பி வருமா. அதன்பிறகு எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தாலும் அம்மா இங்கு வர ஆசைப்பட்டு வாய் விட்டுக் கேட்டும் ஒருமுறை கூட கூப்பிட முடியவில்லையே என்ற கவலை என்னை வாட்டிக் கொண்டேயிருந்தது.
இன்று அவர்களின் நிலைமைதானே எங்களுக்கும் மகனின் பிரிவில் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறோம். ரேவதி எழுந்து குளியலறைக்குள் போனாள். நான் சோபாவில் வந்தமர்ந்து ரீவியை ஓடவிட்டு அவளுக்காகக் காத்திருந்தேன். வேறு சத்தமின்றி வீடு அமைதியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிற ரேவதி ஜீவாவின் திருமணத்தையும் அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்துத்தானே செய்தாள்.
“கலியாணம் செய்யிற வயது வந்திட்டுது. ஆரையாவது பார்த்து வைச்சிருக்கிறாயா” ரேவதி ஒருநாள் அவனிடம் கேட்டாள்.
“என்னம்மா நீங்கள் படிப்பு வேலை எண்டு இருந்ததால அந்த நினைப்பேயில்லை. இருந்தால் உங்களுக்குச் சொல்லியிருப்பேனே. நீங்களே பாருங்கோ”
ஜீவா சொன்னதும் ரேவதி சந்தோஷத்துடன் என்னைப் பார்த்தாள்.
தனக்கு தெரிந்தவர்கள் மூலமும் ஏஜென்சி மூலமும் தேடத் தொடங்கினாள். லேசில் யாராலும் அவளைத் திருப்திப் படுத்த முடியவில்லை. அவளின் தேடல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தது. ரேவதிக்குப் பிடித்து ஜீவா பெண்ணோடு கதைத்து சம்மதம் சொல்ல எல்லோருடைய ஆசீர்வாதத்தோடும் வீட்டுக்கு வந்தாள் சிந்து. வீட்டிலும் சில மாற்றங்கள் செய்தாள் ரேவதி.
எங்கள் படுக்கையை கீழேயுள்ள அறைக்கு மாற்றி மாடி முழுவதையும் அவர்களுக்கே கொடுக்க அவர்களும் எங்களுடனேயே இருந்தார்கள். தன் விருப்பப்படி எல்லாம் நடக்கிறது என்ற கர்வத்தோடு இருந்தாள் ரேவதி.
சிந்துவின் அண்ணாவும் அக்காவும் கனடாவில் இருப்பதால் ஒரு மாத லீவில் தேனிலவு கொண்டாட இருவரும் கனடாவுக்கு போக விரும்பினார்கள். ஒரு மாதமா… என்று இழுத்தாலும் மறுப்பேதும் சொல்லவில்லை ரேவதி. கனடா போனதும் சுகமாக வந்து இறங்கியதாக ஜீவாவிடமிருந்து போன் வந்தது. அதன் பிறகு இரண்டு நாட்கள் வரவில்லை.
“என்னை விட்டு தூரப்போனால் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கதைப்பான் குட்நைற் சொல்லித்தானே படுப்பான். ஏன் எடுக்கேல” போனோடு சுற்றினாள்.
“போனவன் சந்தோஷமாய் இருந்திட்டு வரட்டும் விடு” சொன்னதைக் கேட்காமல் அவள் எடுத்தபோது அவன் எடுக்கவில்லை பிறகு எடுத்தான்.
“ஏனப்பு இவ்வளவு நாளும் எடுக்கேலை. நான் பாத்துக் கொண்டிருப்பன் எண்டு தெரியாதே”
“வந்தவுடன எடுத்து கதைச்சனான்தானேம்மா. நேரம் கிடைக்கிறபோது எடுத்துக் கதைக்கிறன்”
முன்பு மாதிரி ஒவ்வொரு நாளும் எடுத்து கதைக்காமல் இரண்டு மூன்று நாளுக்கொரு தடவை எடுத்து கதைத்தான். அவளால் தாங்கமுடியவில்லை.
“கலியாணத்துக்கு பிறகு மாறிட்டானா… என்னோட கதைக்காமல் இருக்கமாட்டானே”
“இதோ பார் ரேவதி ஒவ்வொரு நாளும் ஏன் எடுக்கேல கதைக்கேல எண்டு கேக்காத. உன்னோட அவன் இந்த வீட்டில இருக்கவேணும் எண்டால் சில விஷயங்களை நீதான் விட்டுக்குடுக்க வேணும். அவனுக்கும் குடும்பம் வந்திட்டுது. சில முடிவுகளை அவையளே எடுக்கட்டும். நீ சொல்லுறதுதான் அவன் செய்ய வேணும் எண்டு அவனைக் கட்டுப்படுத்தாத ”
“அதெப்படி விடமுடியும். அவன் என்ர பிள்ளை. எனக்குப் பிறகுதான் மற்றவையள்”
கனடாவால் வந்தபின் கேட்டாள். அவன் சிரித்துக் கொண்டே சமாளித்தான். தன்னை விட்டு சிந்து பக்கம் சாய்ந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் தேவைகளை முன்பு மாதிரியே ஓடி ஓடி கவனித்தாள். இரவிலும் அவர்களுக்காக காத்திருந்தாள்.
“எனக்கு பசிக்குது ரேவதி. நாங்கள் சாப்பிட்டிட்டு படுப்பம். அவையள் வந்து சாப்பிடட்டும்”
“இரவில ஒண்டாய்தானே சாப்பிடுவம் அதைவிடக்கூடாது வரட்டும்”
“முந்தின மாதிரி அவனுக்கு நீதான் எல்லாம் செய்யவேணும் சாப்பாடு குடுக்கவேணும் எண்டு இருக்காத. சிந்து கவனிக்கட்டும்”
“ஏன் சிந்துவுக்கும் சேர்த்துத்தானே செய்யிறன்”
அவர்களுக்கிடையில் குறுக்கிடுவதை உணராமல் தான் செய்வது சரியென்று நினைக்கிறாள். இவளுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. இரவில் அவர்களுக்காக காத்திருக்க பல நேரங்களில் வெளியில் சாப்பிட்டு வருவார்கள்.
“எங்களுக்காக காத்திருக்க வேண்டாமம்மா நேரத்துக்கு சாப்பிட்டுப் படுங்கோ”
எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாள். இவர்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயம் என்மனதை அழுத்தியது.
சிந்து அதிகம் கதைப்பதில்லை. ரேவதி ஜீவாவை வளர்த்தது படிப்பித்தது அவன்தான் தன் உலகம் என்று சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பாள். தனக்கிருக்கும் மகனின் உரிமையை உணர்த்தி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவள் ஆறுமாதத்தில் அவர்கள் இருவரும் தங்கள் முடிவை சொன்னபோது தாங்க மாட்டாமல் உடைந்தே போனாள். என்னாலும் நம்பமுடியவில்லை. எங்களோடு இருந்து கொண்டே எங்களுக்குத் தெரியாமல் அமெரிக்காவில் வேலை எடுத்து தங்குவதற்கு வீடும் பார்த்து போவதற்கான அனைத்து ஒழுங்குகளையும் செய்து விட்டு பத்து நாளில் போகவேண்டும் என்று சொன்னது கேட்டு உறைந்தே போனோம்.
“ஏன்டா சொல்லாமல் இப்பிடிச் செய்தாய் என்னை விட்டு இருப்பாயா” உயிர்வலியோடு கேட்டாள்.
“உங்களுக்கு சேப்பிரஸாய் இருக்கட்டும் எண்டு சொல்லேல. அம்மா உங்களை விட்டிட்டு இருக்கிறது எனக்கும் கஷ்டமம்மா. உங்கள பாக்க அடிக்கடி வருவன். நீங்களும் வந்து போகலாம். வந்து போற தூரம் தானேம்மா. நல்ல வேலை நல்ல சம்பளம். லண்டனை விட அமெரிக்கா எனக்கு பிடிச்சிருக்கு”
எங்களை விட்டுப் போகும் எண்ணம் எப்போதும் ஜீவாவுக்கு இருந்ததில்லை. இந்த முடிவை இவன் எடுத்திருக்கமாட்டான். உரிமை கொண்டாடும் ரேவதியிடமிருந்து ஜீவாவைத் தன் பக்கம் இழுக்க சண்டை சச்சரவு இல்லாமல் தந்திரமாக காயை
நகர்த்தியிருக்கிறாள் சிந்து என்பது தெரிந்தது. எல்லாம் கை மீறியபின் என்ன செய்ய முடியும். என்னைத் திடப்படுத்திக் கொண்டு ஆறுதல் சொன்னாலும் அழுது அழுது கரைந்து போனாள் ரேவதி.
காலடிச் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். பக்கத்தில் வந்து அமர்ந்தாள் ரேவதி.
ரீவியின் சத்தத்தை கூட்டினேன். கவியரங்கு நடந்து கொண்டிருந்தது. சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றிலுள்ள பாடலின் சிறப்பையும் பொருளையும் தந்து கொண்டிருந்தார் பேச்சாளர்.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”
நாம் அனுபவிக்கும் நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை. அதுபோல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை” பேச்சு தொடர்ந்து கொண்டு போக
சொல்லிய வரிகள் என் மனதை ரணமாக்கியது. ரேவதியின் கண்களும் கலங்கின.
“இந்த துன்பத்துக்கு நாங்கள்தானே காரணம் ரேவதி. பிள்ளைக்கு பிறந்த ஊரின் அருமை பற்றி சொல்லாமல் சொந்தபந்தத்தின்ர அன்பை உணரவைக்காமல் வெளிநாட்டு கலாச்சாரத்தில் சுயநலமாய் அவனை வளர்த்தம். அவனும் தான் தன்ர சுகம் எண்டு முடிவு எடுத்து சுதந்திரமாய் போயிட்டான். இனி அவனுக்காக நாங்கதான் காத்திருக்க வேணும். நாளைக்கு குழந்தை பிறந்தால் பேரப்பிள்ளையைக் கொஞ்சுறதுக்கும் ஏங்கிக் கொண்டிருக்க வேணும்”
விம்மி வெடித்து அழுகின்ற ரேவதியின் குரல் வெகுநேரம் கேட்டுக் கொண்டேயிருந்தது.
.
நிறைவு…
.
.
.
.
விமல் பரம்
.
நன்றி : நடு இணையம்