உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும் என அதன் தலைவர் நிமால் புஞ்சிஹேவ தெரிவித்தார்.
தேர்தல் செலவுகளுக்காக பெப்ரவரி மாத இறுதிக்குள் ரூ. 800 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோரியிருந்ததாகவும், இந்த நிதியை தவணை முறையில் விடுவிக்க முடியுமென்றும் திறைசேரி தெரிவித்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கையும் இதுவரை செவிசாய்க்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி திறைசேரி உள்ளிட்ட அரச நிறுவனங்கள் ஆணைக்குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்பது தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தெரிய வந்தால், உயர் நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் தீர்வு காண வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரித்தார்.