எமது நாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் அதன் சரத்துக்களினூடாக அமையப்பெற்றுள்ள நல மேம்பாடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத நிலையே காணப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமும் இருக்கக்கூடாதென்பதே எனது கருத்தாகும். 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் மூலமாகவே தேசிய ரீதியில் பிரிவினையற்ற தேசமாக இலங்கையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அரசியல் சமூக, சமய, கலை, கலாசார விழுமியங்களோடு சுதந்திரமாக வாழவேண்டுமென்பதே எல்லோரதும் எதிர்ப்பார்பாகும்.
அந்தவகையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் ஏற்றவகையிலானதாகவே அமைந்துள்ளது. அரசியலமைப்பை மாற்றி, புறக்கணித்து அல்லது கொச்சைப்படுத்தி அதனூடாக நாட்டை குட்டிச்சுவராக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவுபட கூறியுள்ளமை எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதாகவுள்ளது.
நாடு கடந்து வந்த சிக்கல்கள், அரசில், சமூக, பொருளாதார நெருக்கடி தற்போது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு சுமூகமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் காலங்களில் சீரான நிலையை அடையும் என்பதை ஜனாதிபத ரணில் விக்கிரமசிங்க உறுதியாக அறிவித்துள்ளார். அதேபோன்று அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக மக்களை திசை திருப்பும் நோக்கம் ஒருநாளும் கைகூடாது என்பதையும் தன்னால் உறுதியாக கூறமுடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் அதில் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்லது அது தேவையில்லை என்ற தொனியில் பேசுவதோ எவ் எகையிலும் பொருத்தமானதல்ல. சட்டங்கள் வகுக்கப்படுவது நாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டேயொழிய தனிப்பட்டவர்களின் நலனுக்காகவோ அல்லது இனவாதம் பேசும் அரசியல் கட்சிகளின் நன்மைக்காகவோ இல்லை.
13ஆவது திருத்தச்சட்டத்தின் பின் எட்டு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது அது 23 வரை வந்துள்ளது.
புதிய திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்படும் போது மௌனியாக இருந்தவர்கள சுமார் 40 வருடங்களுக்கு பிறகு அதனை விமர்சனம் செய்வதோ அல்லது அதனை எமது அரசியலமைப்பில் இருந்து நீக்குவதற்கு எத்தனிப்பதோ பாரதூரமான சிக்கல்களுக்கும் சர்வதேச ரீதியிலான விரிசல்களுக்கும் வித்திடும் என்பதே வெளிப்படை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.