அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துகொண்டிருந்தார். எனது டூவீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
“என்னங்க ஆச்சு..?” – கேட்டேன்.
“வேகமா வந்த ஆட்டோ சக்கரம் கால்ல ஏறிடுச்சு தம்பி…”
“வாங்க… எனக்குத் தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலதான் இருக்கார். கட்டு போட்டு ரத்தம் கசியறதை முதல்ல நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்!” – என்றேன்.
வேண்டாம் என்று விலகியவரை விடாப்பிடியாக அழைத்துப் போனேன்.
எல்லாம் முடியவும், “மணி என்னங்க… நேர மாயிடுச்சே… நேரமாயிடுச்சே!” என்று பறந்தார்.
“அப்படி என்னங்க அவசரம்..?” என்றேன்.
“என் பொண்டாட்டி பசியோட வீட்டுல இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டுப் போகணும்..!”
“ஏன் பெரியவரே… உங்க கால்ல அடிபட்டி ருக்கு… இப்ப இட்லியா முக்கியம்? லேட்டா போனா திட்டுவாங்களா?” – சீண்டினேன்.
“அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சு! நான் யார்னுகூட அவளுக்குத் தெரியாது..!”
“அப்படிப்பட்டவங்க உங்ககிட்ட ஏன் லேட்டுனு எப்படிக் கேப்பாங்க? அவங்களுக்குத்தான் உங்களையே யாருனு தெரியாதே! கவலைப்படாதீங்க!” என்றேன்.
புன்னகைத்தபடியே அவர் என்னைப் பார்த்துச் சொன்னார்…
“ஆனா, அவ யார்னு எனக்குத் தெரியுமே தம்பி!”
– 18.7.2016
– சந்திரஹரி
நன்றி : சிறுகதைகள்.காம்