இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிவதற்காக, தடயவியல் நிபுணர்கள் மற்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய 5 பேர் கொண்ட குழாம் ஒன்று இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டது.
தடயவியல் மருத்துவம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான மூன்று பேராசிரியர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி வி.ஆர். ருவன்புர தலைமையிலான சட்ட வைத்திய நிபுணர்கள் இந்தக் குழாமில் உள்ளடங்குகின்றனர்.
குற்றவியல் சட்டத்தின் 373 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட மேற்படி குழுவிடம் இந்த மரணம் தொடர்பாக நீதிமன்றிடம் உள்ள அனைத்து அறிக்கைகளையும் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான பதிவாளருக்கு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மரணித்தவர் தொடர்பில் மனநல நிபுணர் நீல் பெர்னாண்டோ நீதிமன்றில் சமர்ப்பித்த தடயவியல் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.