பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதை அரசு பிற்போட்டாலும் அந்தச் சட்டமூலத்தை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசிடம் இதைச் செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுக்க முடியாது; செய்ய வேண்டாம் என்று கூறவும் முடியாது. அப்படியொரு சட்டமூலம் இது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மக்களின் எதிர்ப்பு வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் எங்களிடம் இருக்கின்றது என்று நாணய நிதியத்திடம் காட்டுவதற்காகவே அரசு இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது.
இதை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனக்கு ஆபத்து வரும் வரை எவரும் இருக்கக்கூடாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும்தான். அதனால் எல்லோரும் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும்.
சில சமூகச் செயற்பாட்டாளர்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கின்றார்கள். அவர்களுக்கென்று பிரச்சினை வரும்போதுதான் சத்தம் போடுவார்கள்.” – என்றார்.