“உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியவை வருமாறு:-
“நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆவணமொன்றை எடுத்து வந்து, சில விடயங்களை எடுத்துரைத்தார். ஜனாதிபதியிடமும் அந்த ஆவணம் இருந்தது.
குறித்த ஆவணத்தில் எதிரணி வரிசையில் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பம் இட்டிருந்தார். ஏனையோர் ஆளுங்கட்சினர். அத்துடன், பிரதிநிதித்துவ அரசியல் அந்தஸ்த்து அற்றவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இதனை மக்கள் பிரதிநிதிகளின் ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டோம்.
இந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி குழுவொன்றை அமைக்கவும் முற்பட்டார். அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். அப்படியான குழுவொன்றை அமைத்தால் வெறுமனே பேச்சு நடத்தப்படுவது மட்டுமே இடம்பெறும், காத்திரமாக எதுவும் நடக்காது எனச் சுட்டிக்காட்டினோம். அதில் நாம் பங்கேற்கபோவதில்லை எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம்.
அத்துடன், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அறிக்கைகள் உள்ளன. ஒரு வரைபுகூட உள்ளது. இதைச் செய்வதை விடுத்து, நிர்வாகம் சம்பந்தமான பேச்சுகளில் மட்டுமே ஈடுபடுவது பிரயோசனமற்றது.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கை. எனினும், இவை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.” – என்றார்.