முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு இன்று காலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, நந்திக்கடலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலியின் பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளோம்” – என்றார்.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று தொகுதிக் கிளை செயலாளர் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சி மூலக் கிளைகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.