செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொது நினைவுத் தூபிக்குத் தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு!

பொது நினைவுத் தூபிக்குத் தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு!

2 minutes read

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் எதிர்த்துள்ளனர். ஆனால், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆதரித்துள்ளனர்.

“படையிலிருந்து உயிரிழந்தவனும், படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உயிரிழந்தவனும் ஒன்றல்ல. மக்கள் தாம் விரும்பும் இடத்தில் நினைவேந்த உரித்து உண்டு. அதனைத் தடுத்து பொதுத்தூபியில்தான் நினைவேந்த முடியும் என்று கட்டளையிட முனைவது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மேலும் பாதிக்கச் செய்யும். பொதுத்தூபி அமைக்கப்படுவதையும் அங்குதான் தமிழ் மக்களும் நினைவேந்தவேண்டும் என்பதையும் எதிர்க்கின்றேன்” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“பொதுத்தூபி அமைத்து இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர்ந்து விட்டது என்று சர்வதேசத்துக்குக் காண்பிக்க அரசு திட்டமிடுகின்றது. இனப்படுகொலை புரிந்த படையினருக்கும், விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இனத்திலிருந்து மடிந்தவர்களுக்கும் ஒரே இடத்தில் நினைவேந்தலைச் செய்ய முடியாது. அது இயற்கைக்கு முரணானது” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

“படையினரையும் அவர்களால் கொல்லப்பட்ட மக்களையும் ஒரே இடத்தில் நினைவுகூர முற்படுவதானது கேலிக்கூத்தானது. இது இனங்களிடையே மேலும் விரிசலையே ஏற்படுத்தும்” – என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட எமது மக்கள் கொழும்புக்கு வந்து பொதுத்தூபியில் தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதும், அவர்களது உறவுகளின் இழப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டிய படையினருக்கும் அதே இடத்தில் நினைவுகூரலைச் செய்வது என்பதும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போன்றதாகும்” – என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

“பொறுப்புக்கூற வேண்டிய படையினருடன் இணைந்து எப்படி தமிழ் மக்கள் நினைவுகூரமுடியும்?” என்று கேள்வி எழுப்பினார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

“இதனைத் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே பார்க்கின்றேன். இத்தனை ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்மறையாகச் சிந்தித்தவர்கள் தற்போது மாறுபட்டு சிந்திக்கின்றார்கள். இந்தச் சிந்தனையானது இதயசுத்தியாக இருக்கவேண்டும்” – என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“1983 – -2009 உள்நாட்டு இறுதிப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களை ஒன்றாக நினைவு கூருவதற்கு நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைத்தேன். எனது கோரிக்கையை ஜனாதிபதி சாதகமாகப் பரிசீலித்த நிலையில் கொழும்பில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான இடத்தை அடையாளப்படுத்துவதற்காகக் குழு அமைப்பதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின் சாதகமான பதிலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More