புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எனக்கு யோசனையை முன்வைக்க மட்டுமே முடியும்! – நழுவினார் ரணில்

எனக்கு யோசனையை முன்வைக்க மட்டுமே முடியும்! – நழுவினார் ரணில்

2 minutes read

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) மாலை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் உள்ளதாவது:-

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை நாடாளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்ய முடியாது என்றும், இந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்தால், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

முதல் பட்டியலில் உள்ள, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல விடயங்கள் மத்திய அரசின் கீழ் இருப்பதாகவும், எனவே அந்த அதிகாரங்களைப் போன்றே விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் கீழ்மட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்கான கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும், அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மாகாண சபை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர்கள் பதவியை வகித்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தப் பதவியை வகித்தவாறே மாகாண சபை உறுப்பினராகச் செயற்படுவது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.வி.விக்னேஸ்வரன், சாகர காரியவசம், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, வண. அத்துரலியே ரத்ன தேரர், வீரசுமன வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, லக்‌ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

– இப்படி ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More