செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தரம் 3 மாணவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை | கல்வி அமைச்சர்

தரம் 3 மாணவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை | கல்வி அமைச்சர்

2 minutes read

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் தலைமையில் சுமார் 800 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பபெற்றதாகத் தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியையும், பாலர் பாடசாலைகளை இயக்குபவர்கள் தொடர்பில் கடுமையான அவதானங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கொழும்பில் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“கல்வி அமைச்சின் தலைமையில்  800 அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 85 வீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும் அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்” என்றார்.

“ தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை குறிப்பாக ஆரம்பத் தரங்களுக்கு அதிகரிக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது. சிறுவர்களின் அடிப்படைக் கற்றலை ஊக்குவிக்கும் அதேநேரம், கல்வியில் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய திறன் மிக்க மனித வளத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

“ கொவிட் பரவலால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆசிரியர்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இவ்வாறு கற்றல் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

“ கற்றல் முறைமை மற்றும் பாடசாலை தரங்களில் முதலில்  மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. முக்கிய மாக ஆரம்பப் பிரிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, “ நாடளாவிய  ரீதியில் பல பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறான பயிற்சிகளைப் பெற்று கற்பிக்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது. உயர் தர பரீட்சையைவிட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமான தொன்றாக எமது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இதனை முற்றிலும் மாற்ற வேண்டும். ஏன் இந்த மாற்றங்களை செய்வதற்கு விடுகிறார்கள் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.

இங்கு உரையாற்றிய யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் கூறுகையில்,

“ எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் சமூகப் பொருளாதாரத் திறன்களே சிறுவர்கள் தமக்கான மற்றும் தமது குடும்பங்கள், சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார்.

“நாடு எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான இன்னல்களால் கல்வியை இழப்பவர்கள், மெதுவாகக் கற்றுக்கொள்பவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின் கற்றல் சாதனையில் விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சின் முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை  மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் தலைமை தாங்குகின்றன.

மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதத்திற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்போது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 முதல் 6 வீதங்களாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச அளவுகோலுக்கு கீழ் காணப்படுவதுடன்  தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகின்றது.

கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய  நிலையில்  உள்ள சிறுவர்களையும் ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.

”கற்றல் மீட்பு” தொடர்பில் அபிவிருத்திப் பங்காளர்களின்  ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன கடந்த ஜூலை மாதம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன் குறைபாடுகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கு 9 மாகாணங்களிலும் செயலமர்வுகளை நடத்தின.

இதன் இறுதி நிகழ்வு 16 ஆம் திகதி புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More