“நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதன்போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை பூஸ்ஸ கடற்படை உயர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய சவால்களை ஆயுதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உயர் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட பாதுகாப்புப் படையைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன் மற்றும் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது எனவும், புதிய தேசிய பாதுகாப்பு மீளாய்வில் இதனை உள்ளடக்க எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பூஸ்ஸா கடற்படை பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதி ரியர் அத்மிரல் தம்மிக குமார ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார்.
இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டியதுடன், வர்ணக் கொடிகளும் ஜனாதியால் கையளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வர்ணமயமான கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார்
இந்த நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், தென் மாகாண ஆளுநர் விலி கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற ) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படைப் பதவிநிலைப் பிரதானி ரியர் அத்மிரல் ஜெயந்த குலரத்ன, தொண்டர் படையணியின் பிரதானி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.