“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்குப் பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். முடிந்தால் பொதுஜன பெரமுனவில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் என்றும், அதற்காக மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் குறிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.
முடிந்தால் சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைமையால் தோன்றிய நெருக்கடிகளிலிருந்தும், நாட்டை மீளக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள், மக்கள் ஆணையற்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு மறந்து போயுள்ளது.
மீண்டும் அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கைக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
முற்போக்கான பார்வையுடனும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கையை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.
இது தொடர்பில் பரந்துபட்ட புரிந்துணர்வு கொண்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்குப் பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர்.” – என்றார்.