செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – விஜித பேருகொட

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – விஜித பேருகொட

2 minutes read

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார்.

அதற்காக ஓய்வூதியச் சட்டம் மற்றும் பிரிவெனாக் கல்விச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு அவசியமான ஆலோசனைகள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளின்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த  விஜித பேருகொட,

நமது நாட்டில் கலாசாரத்திற்கும் மதத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், அரச காலம் முதல் ஒரு கிராமத்தின் தலைவராக அக்கிராமத்தில் உள்ள விகாரையின் பிரதம தேரரே செயற்பட்டு  வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரிவெனாக் கல்வியைப் பொருத்தவரையில், விகாரைகளிலேயே பெரும்பாலும் பிக்கு மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இந்நாட்டு வரலாற்று நெடுகிலும் பிரிவெனாக் கல்வி முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது.

தற்காலத்தில் எமது நாட்டில் பெரும்பாலும் மேலைத்தேய கல்வி முறையே காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், ஆனாலும் இன்று வரை எமது பிரிவினாக் கல்வியைப் பாதுகாத்து,  நடைமுறைப்படுத்தி வருவதில் தேரர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் அவர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று பிரிவெனாக் கல்விக்கென்று தனியான இராஜாங்க அமைச்சே உள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில், தற்போது எமது நாட்டில் 05 பிரிவெனாக் கல்விப் பிரிவுகள் இருப்பதாகவும், 822 பிரிவினாக் கல்வி நிறுவனங்களும், 77000 இற்கும் அதிகமான பிரிவெனா மாணவர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சுமார் 8000 ஆசிரியர்கள் இருப்பதாகவும்   22 மாவட்டங்களில் பிரிவினாக் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய கல்வி அமைச்சு, பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கியதாகவும்.

அதன் மூலம் பிரிவெனாக் கல்வி மேம்பாட்டுக்காக இயன்றளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பிரிவெனாக் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்களுக்கு ஏனைய பாடசாலைகளைப் போன்று உள்நாட்டு சாதாரண பாடசாலைப் பாடவிதானங்களும் கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், பிக்கு மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரங்களில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஏனைய அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் போன்று பிரிவெனா ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குதல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரிவெனாக் கல்வியை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, சர்வதேச ரீதியில் எமது நாட்டு பிரிவெனாக் கல்வியின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் பிரிவெனாக் கல்வி மேம்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் பிரிவெனாக் கல்வி நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதார ரீதியிலான பொருள் மற்றும் சேவை தொடர்பான அபிவிருத்தி மாத்திரமன்றி, அந்நாட்டு மக்களின் சமூக, கலாசார, ஒழுக்க மேம்பாடு  மற்றும் மானிட முன்னேற்றமே உண்மையில் முழுமையான அபிவிருத்தியாகும் என்றும்   இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More