ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இன்று முற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்தின் அபிவிருத்தி ஆலோசகர் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் எட்வட்டும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அரசின் பொருளாதார இலக்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் மேலும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., அரசு தேர்தலை நடத்தாது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்துள்ளமை தொடர்பிலும் ஐ.நா. பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
தேர்தலை நடத்துவதற்குக் கட்டளையைப் பிறப்பித்த நீதிபதிகள் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுனர் எனவும், மக்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குமுறைக்குட்படுத்தி ஜனநாயக விரோதப் போக்கை அரசு முன்னெடுக்கின்றது எனவும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.