மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியைச் சட்டவிரோதமான முறையில் இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தித் துப்பரவு செய்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் இயந்திரங்களைக் கைவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள அரச காணியை இனந்தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தி காடுகளை அழித்து காணியைத் துப்புரவு செய்து கொண்டு இருக்கின்றனர் என்று இலுப்பைக்கடவைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் 541 ஆவது படைப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர்.
இதன்போது ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தித் துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கண்ட நிலையில் அந்த இயந்திரங்களை அங்கேயே கைவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்தநிலையில் காணியைத் துப்பரவு செய்யப் பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.