“இலங்கையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. அதற்கான முழு ஆதரவை ரணிலுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு சந்திரிகா வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தலைவர்கள் கோரினாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமென மற்றுமொரு தரப்பினர் தொடர்ந்தும் கூறுகின்றார்கள்.
இந்தநிலையில், குறித்த சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது எனும் கேள்வியை எழுப்ப நான் விரும்புகின்றேன்.
இந்தச் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கோரினார். அதற்கான முழு ஆதரவை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.
எனினும், அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ள நிலையில், அதனை யார் நடைமுறைப்படுத்துவது எனும் கேள்வி எழுந்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு, கிழக்கில் குறைந்தது மாகாண சபைகளாவது இருக்க வேண்டும். அதற்கு முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனது ஆட்சிக் காலத்தின்போது, படிப்படியாக நான் செய்ய முற்பட்டவை சரியானது என்பதை தற்போது மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நான் புதிய அரசமைப்புச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தேன். அதனை முழு உலகமும் வரவேற்றது. எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற 7 வாக்குகள் போதாமல் போன காரணத்தால் அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை.” – என்றார்.