யாழ்ப்பாணத்தில் புதிய மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் முன்வைத்த கோரிக்கை, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
அதன்போது, தெல்லிப்பழையில் புதிதாக மதுபான சாலை ஒன்றை அமைக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும், அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர் எனவும் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதன்போது, அவைத் தலைவர் யாழ்ப்பாணத்தில் புதிதாக எந்த மதுபான சாலைக்கும் அனுமதி வழங்கக் கூடாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தார்.
நியதிகளின் அடிப்படையில், யாழ்ப்ப்பாணத்தில், கள்ளுத் தவறணைகள் உட்பட 146 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை வழங்க முடியும். எனவே, யாழ்ப்பாணத்தில் எத்தனை உள்ளது என பரிசீலித்த பின்னரே புதியதற்கு அனுமதி வழங்க முடியுமா? இல்லையா? எனத் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து சீ.வீ.கே. சிவஞானத்தின் கோரிக்கை கூட்டத்தில் தீர்மானமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.