திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரண்டு திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டடத் தொழிலாளி ஒருவர், திருடன் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை, நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டடத் தொழிலாளிகள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றபோது இரு கட்டடத் தொழிலாளர்கள் திருடர்களைத் துரத்திச் சென்றனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இருவரும் 100 மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று இரண்டு திருடர்களையும் பிடித்துள்ளனர். இதன்போது திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கட்டடத் தொழிலாளி ஒருவரின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.