செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை!

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை!

3 minutes read
“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை. அத்துடன் இந்த நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்று நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.”

– இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி அதில் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு மன அழுத்தம் இருப்பது வழமை. மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும். நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம்  உள்ளது. நாடாளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது. சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது. அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும்.

தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாகப் பதவி விலகுவதாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்த வகையானது, யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ, தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்க முடியும். பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க முடியும். அந்த அதிகாரம் எமக்குக் கூட இல்லை. ஆனால், அந்த நீதிபதி எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை.

நீதிபதியின் பதவி விலகல் மற்றும் அதற்கு அவர் குறிப்பிட்ட காரணிகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு எனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். நீதிச்சேவை ஆணைக்குழு மூன்று விடயங்களை அறிவுறுத்தியுள்ளது.

முதலாவதாக, நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி என்று பதிவிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய உயிர் அச்சுறுத்தல்  அல்லது மன அழுத்தம் தொடர்பில் அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கோ, ஆணைக்குழுவின் செயலாளருக்கோ, நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கோ அல்லது தன்னுடன் இணக்கமாகச் செயற்பட்ட தரப்பினருக்கோ எவ்விதத்திலும் அறிவுறுத்தவில்லை.

இரண்டாவதாக, நீதிபதி  சரவணராஜாவை பிரதிவாதியாக்கிப் பெயர் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரம் தொடர்பில் நீதிபதி சரவணராஜா 2023.09.23 மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவ்வேளையில் அவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம்  இருப்பதாகக் கூறவில்லை.

நீதிபதி சரவணராஜாவை சட்டமா அதிபர் அழைத்து வழக்குத் தீர்ப்பை மாற்றியமைக்குமாறு அழுத்தம் கொடுத்தார் என்று ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

நீதிபதி ரி.சரவணராஜா வழங்கிய கட்டளைகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளில் நீதிபதியின் பெயர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து  சட்டமா அதிபரிடம் நீதிபதி ஆலோசனை கோரியுள்ளார். வழக்கில் தனக்காக முன்னிலையாகுமாறு நீதிபதி சரவணராஜா சட்டமா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதைத் தவிர சட்டமா அதிபருக்கும், நீதிபதிக்கும் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை. எனவே, நீதிபதிக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கின்றேன்.

மூன்றாவதாக, நீதிபதி சரவணராஜா 2023.08.29 ஆம் திகதி  நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் 2023.09.23 ஆம் திகதி முதல் 2023.10.01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள தனது நோயாளியான உறவினரைப்  பார்ப்பதற்குச் செல்ல வேண்டும் என்றும், ஆகவே தனக்கு வெளிநாட்டு விடுமுறை வழங்குமாறும் கோரியுள்ளார். அதற்கமை நீதிச்சேவை ஆணைக்குழு விடுமுறை வழங்கியுள்ளது.

நீதிபதியின் பதவி விலகலைத் தொடர்ந்து நாட்டில் நீதித்துறை இல்லாமல் போய்விட்டது என்று பலர் குறிப்பிடுவது கவலைக்குரியது. இந்த நீதிபதி தொடர்பில் அவரது மனைவி நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழு அந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து நீதிபதியிடம் ஒருசில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அவரது தனிப்பட்ட விடயங்களை நாங்கள் ஆராயவில்லை.

இதேவேளை, நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய தீர்மானத்தை ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More