– இவ்வாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
“இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் என்ற ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு அந்தக் குழுவை நியமித்தேன். உண்மை நோக்கத்துடன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம். சூது சம்மியா? அல்லது ரொஷான் ரணசிங்கவா? என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். மறுபுறம் ஊழல் மிக்க கிரிக்கெட் சபைக்கு அடிபணிவதா அல்லது கிரிக்கெட் சபையைத் தூய்மைப்படுத்துவதா என்பதை 225 உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டும்” – என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் கிரிக்கெட் தொடர்பில் ஒட்டுமொத்த மக்களும் பாரிய எதிர்பார்ப்பில் உள்ளார்கள். கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.
2021 காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பலமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிதியை மோசடி செய்யவில்லை. ஆனால், அவர் தவறான ஒருசில தீர்மானங்களை எடுத்தார். தவறான தீர்மானங்களை நான் கடுமையாக எதிர்த்தேன். தவறைச் சுட்டிக்காட்டும் தற்றுணிவு எனக்கு உண்டு.
மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகினார். அதனை சிறந்ததொரு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் சபையின் ஊழல்வாதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து 2023.05.22 ஆம் திகதி நான் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டேன். மோசடியால் மிதமிஞ்சிய விளையாட்டுத்துறையை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். கிராமிய மட்டத்திலான விளையாட்டத்துறையை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 160 பதக்கங்களை இலங்கை வீரர் மற்றும் வீராங்களைகள் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.
கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசானி சரோஜனி தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு சமர்பித்த அறிக்கையைக் கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் உட்பட சகல தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளேன்.
2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான நிதியியல் தொடர்பான விபரங்களை கணக்காய்வு செய்யுமாறு சட்டமா அதிபரிடம் நான் பலமுறை வலியுறுத்தினேன். “அவ்வாறு முடியாது, வேண்டுமாயின் ஒரு வருட கால நிதியியல் விடயங்களை கணக்காய்வு செய்யலாம்” என்று சட்டமா அதிபர் குறிப்பிட்டதற்கு அமைய 2020 ஆம் ஆண்டு ரி 20 போட்டி தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட்டது.
ரி 20 போட்டி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை 2023.09.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட து.இந்த அறிக்கையை ஜனாதிபதி, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தேன்.
இவ்வாறான பின்னணியில் கிரிக்கெட் சபை மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.மக்கள் போராட்டத்தைத் தடுப்பதற்காக இடைக்காலக் குழுவை நியமித்தேன். ஜனாதிபதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. ஊழல், மோசடியாளர்கள் ஜனாதிபதியை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். கிரிக்கெட் தொடர்பில் அவருக்குத் தவறான விடயங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
உண்மை நோக்கத்துக்காகவே நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். இடைக்கால குழு நியமனம் தொடர்பில் நான் அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகாரத்துக்கு அமையவே நான் இடைக்காலக் குழுவை நியமித்தேன். இந்த விடயத்தில் நான் முறையற்ற வகையில் செயற்படவில்லை.
கிரிக்கெட் சபையின் ஊழல், மோசடியாளர்களை நீக்கி நான் நியமித்த இடைக்கால குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது. நேற்றுமுன்தினம் முற்பகல் 10.40 மணியளவில் எனக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. முற்பகல் 11.10 மணிக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு தொடர்பில் அமைச்சர் என்ற ரீதியில் என்னிடம் ஏதும் கேட்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபரிடம் நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், அவர் அதனைக் கருத்தில்கொள்ளவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன கிரிக்கெட் தொடர்பான வழக்குகளில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள அசேல ரெகவுக்கும், நீதிபதி பந்துல கருணாரத்னவுக்கும் இடையில் உறவு முறை காணப்படுகின்றது. ஆகவே, இந்தத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது.” – என்றார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், “நீதிபதிகளின் பெயர்களையும், அவர்களின் தனிப்பட்ட விடயங்களையும் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” – என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க, “நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த நீதிபதிகளையும் நான் தவறாகக் குறிப்பிடவில்லை. ஒருசில நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக நீதிக்கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைச் சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் பேசாமல் எங்கு போய் பேசுவது.?
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன எதிர்வரும் காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுவார். ஆகவே, நாடாளுமன்றச் சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அவரை அழைத்து உடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன தொடர்பில் சபையில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவத்தை ஆவணப்படுத்தல் ஊடாக பிரதம நீதியரசருக்கும், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகின்றேன்.
கிரிக்கெட் மோசடியுடன் தொடர்புடைய ஒருசிலர் ஜனாதிபதிக்குத் தவறான விடயங்களைக் குறிப்பிடுகின்றார்கள். உண்மை நோக்கத்துக்காக நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம். சூது சம்மியா அல்லது ரொஷான் ரணசிங்கவா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.
கிரிக்கெட் மோசடியாளர்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. ஒருசில சட்டத்தரணிகள் வெட்கமில்லாமல் கிரிக்கெட் சபையின் ஊழல்வாதிகளுக்குத் துணைபோகின்றார்கள். கிரிக்கெட் சபையின் ஊழல், மோசடி தொடர்பில் குறிப்பிட ஒரு நாள் போதாது. தற்போதை கிரிக்கெட் சபைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் கிரிக்கெட்டுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தடைகளை ஏற்படுத்துவோம் என ஊழல்வாதிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றார்கள். இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிவதா அல்லது கிரிக்கெட்டைப் பாதுகாப்பதா என்பதை 225 உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.