புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை – இந்திய ஒப்பந்தம்: முழு அமுலாக்கம் மிக அவசியம்! – புதுடில்லியில் விக்கி வலியுறுத்து

இலங்கை – இந்திய ஒப்பந்தம்: முழு அமுலாக்கம் மிக அவசியம்! – புதுடில்லியில் விக்கி வலியுறுத்து

1 minutes read

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது மிக முக்கியமாகும்.”

– புதுடில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சமயம் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இப்படி வலியுறுத்தி இருக்கின்றார்.

ஈழத் தமிழர் நிலைமை தொடர்பான கருத்துப் பரிமாறல் அரங்கு ஒன்றில் பங்குபற்றுவதற்காக புதுடில்லி சென்றிருக்கும் ஈழத்தமிழ்ப் பிரமுகர்களில் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒருவர் என்பது தெரிந்ததே.

இந்தக் கருத்துப் பரிமாறல் அரங்கை ஒட்டி நேற்று (29.11.2023) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்த கருத்துக்களின் சாரம் வருமாறு:-

இலங்கையில் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துச் சூறையாடிக் கொண்டிருக்கின்றது சிங்கள இனவாத அரசு. காணிகள் ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், புராதன தலங்கள் மற்றும் கோவில்கள் அழிப்பு என்று நீண்ட நாச வேலைகள் தொடர்கின்றன.

இவற்றில் இருந்து தமிழர் தாயகம் தப்பி பிழைப்பதற்கு, அதற்கு அதிகாரப் பகிர்வு நடைமுறையாக்கம் அவசியம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலமான அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 13ஆம் திருத்தமும், அதன் கீழான மாகாண சபை முறைமையும் காலதாமதப்படுத்தப்படாமல் நடைமுறைக்கு வர வேண்டும். அது மாத்திரமல்ல, தமிழர் தாயகம் இப்போது இரண்டு வல்லாதிக்க சக்திகளின் (இந்தியா மற்றும் சீனா) மைதானமாக மாறும் சூழல் உள்ளது.

இலங்கை அரசு இரண்டு பக்கமும் விளையாடுகின்றது. சீனாவுடனும் நட்புப் பாராட்டி, இந்தியாவுடனும் குழைந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், தமிழர் தாயகமோ இந்தியாவுடன் மட்டும்தான் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. இந்த உறுதிப்பாட்டை இந்தியா சரிவரக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலமான அதிகாரப் பகிர்வேனும் முழு அளவில் தமிழர்களுக்கு முழுமையாகக் கிட்டுவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

இல்லையேல் தமிழர் தாயகமும் மாறி சிந்திக்கும் – கைகொடுப்பதற்கு, கைநீட்டிக் காத்திருக்கும் தரப்புகள் பக்கம் நாடும் – சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

அப்படி நேர்வது தமிழருக்கும் நல்லதல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல.

ஆகவே, தனது பாதுகாப்பு எதிர்காலம் கருதியேனும் இந்தியா முன்னர் தான் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைச் சொல்லுக்குச் சொல் – வாசகத்துக்கு வாசகம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

– இந்தச் சாரப்பட விக்னேஸ்வரன் அங்கு கருத்துத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More