செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன நல்லிணக்கத்துக்கான ‘இமயமலைப் பிரகடனம்’ ரணிலிடம் கையளிப்பு!

இன நல்லிணக்கத்துக்கான ‘இமயமலைப் பிரகடனம்’ ரணிலிடம் கையளிப்பு!

2 minutes read

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“பல வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்தன. ஆனால், இந்த மோசமான நிலைமையை வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்தனர்.

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் மிகவும் அவசியம். இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை. ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது.” – என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம், அந்த மாகாணங்களை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இதன்படி, பூநகரி பிரதேசம் எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக மாறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்தைப் பாராட்டிய உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழுப் பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ‘இமயமலைப் பிரகடனம்’ வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க வண. மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சங்க நாயக்க வண. சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், மேல் மாகாணத்தின் பிரதான சங்க நாயக மற்றும் ஸ்ரீ தர்மரக்ஷித பிரிவின் பதிவாளர் வண. கிதலகம ஹேமசார தேரர், வஜிரவங்ச பிரிவின் பதில் மகாநாயக்க பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித அபிவிருத்தி ஆய்வு மையத்தின் தலைவருமான வண, களுபஹன பியரதன தேரர், மத்திய மாகாணத்தின் பாததும்பர பிரதம சங்க நாயக வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், ராமன்ய நிகாயவின் பிரதிப் பதிவாளர் வாந்துவே தம்மவங்ச தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பணிப்பாளர் பவன் பவகுகன், பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் வேலுப்பிள்ளை குகனேந்திரன், கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், ராஜ் தவரத்னசிங்கம், கலாநிதி ஜெயராஜா ஆகியோருடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More