யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான நான்கு பொலிஸாரையும் வழக்கின் பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞர் கொடூர சித்திரவதைகளுக்குள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.
அது தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன .
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸாரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதன்போது நடைபெற்ற அடையாள அணி வகுப்பில் வழக்கின் பிரதான சாட்சியான கொலையான இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் மன்றில் தோன்றி சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார்.
அதைத் தொடர்ந்து நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதிவான் நீடித்து உத்தரவிட்டதுடன், வழக்கையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.