ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஜனாதிபதி நாளை (21) வியாழக்கிழமை கூட்டியுள்ள – வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும். ஆகவே, நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை.” – என்று விக்னேஸ்வரன் எம்.பி. அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்குக் கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நான் 24.07.2023 மற்றும் 15.08.2023 ஆகிய திகதிகளில் ஜனாதிபதியை கலாநிதி கே.விக்னேஸ்வரனுடன் சந்தித்தேன்.
ஜனாதிபதியுடனான இரண்டாவது சந்திப்பின் போது, கீழ்க்கண்டவாறு ஐந்து நிபுணர்களை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வுக்கான குழுவொன்றை நியமிப்பது பற்றி அவர் சாதகமாகப் பேசினார்.
அரசமைப்பின் 154 டி பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதியால் குழுவை நியமிக்க முடியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். சட்டப்பிரிவு 154 எல் இன் கீழ் பிரகடனம், சட்டங்கள் ஒப்புதலுக்குத் தயாராக இருக்கும் போது மட்டுமே தேவைப்படும். செப்டெம்பர் 1, 2023 இற்குள் குழு செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இது நடக்கவில்லை. இப்போது டிசம்பர் 2023. 13 ஆவது திருத்தம் முழுவதுமாக அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் இப்போதைக்கு ஏமாற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
13ஆவது திருத்தத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 வரைவு சட்டங்களைத் தயாரிப்பதே குழுவின் ஆரம்பப் பணியாகும். இந்தப் பணி சுமார் 6 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 154 எல் பிரிவின் கீழ் ஒரு பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், நிச்சயமாக அந்த வரைவு சட்டங்களின் ஒப்புதல் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்திய அரசால் தவறாகக் கையகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் விடயங்களை மீளப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய நிர்வாக நடைமுறைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கும் இக்குழு வழிவகைகளையும் வழிமுறைகளையும் வகுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகங்களை மாகாணங்களுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் குழுவின் ஆலோசனை ஜனாதிபதிக்கு அவசியமானது. ஜனாதிபதி உறுதியளித்தபடி இவை எதுவும் நடைபெறவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.
ஆகவே, 2023 டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகின்றேன்.” – என்றுள்ளது.