ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான – நீதியான – தீர்வைப் பெற்றுத்தர வலிமையற்ற இந்தியா, தன் இயலாமையை மூடி மறைக்கப் புதுக்கதை – கயிறு – விடுகின்றது. இலங்கை அரசுக்கு எம்மால் வெறும் வலியுறுத்தல் மட்டுமே தர முடியும் எனக் கைவிரித்து விட்ட இந்தியா, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் இலங்கை அரசிடமிருந்து ஏதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தலைவர்களை அழைத்து அரசியல் பாட போதனை – உபதேசம் – நடத்தி அனுப்பி வைத்திருக்கின்றது அது.
“இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு அரசுக்கு எம்மால் (இந்தியா) வலியுறுத்த மட்டுமே முடியும். ஆனால், நீங்கள் (தமிழ்த் தேசியக் கட்சிகள்) ஒற்றுமையாக இருந்தால் இலங்கை அரசுக்கு வலுவாக அழுத்தம் கொடுத்து எந்தவொரு தீர்வையும் நீங்களாகவே பெற்றுக்கொள்ள முடியும். எனவே, உங்களுக்கிடையில் ஒற்றுமை மிகவும் அவசியம்.” – என்று இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் தெரிவித்திருக்கின்றார்.
ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற பெயரில் இலங்கை விடயத்தில் தலையிட்டு, அதே காரணத்தின் அடிப்படையில் இலங்கையுடன் தனது புவியியல் நலனையும் உறுதிப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்தையும் திணித்த இந்தியா, அதனடிப்படையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தனது துருப்புகளை அமைதிப் படை என்ற பெயரில் தமிழர் தாயக்த்தில் ஆக்கிரமிப்புப் படையாக இறக்கி, தமிழர் தேசம் மீது இரண்டரை ஆண்டுகள் கொடூர யுத்தத்தை நடத்தி, பேரழிவை ஏற்படுத்தித் தனது ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாண சபை என்ற அரைகுறைத் தீர்வை திணிக்க முயன்றது.
இந்தத் தீர்வை புதிய – சாதாரண – சட்டம் மூலமே இலங்கை ஊதித் தள்ளி விடும் என்பதால் அதை ஏற்க முடியாது என மறுத்த தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நேரடியாக இராணுவ ரீதியில் அழிக்க முயன்றது இந்தியா. அது முடியாமல் கையைச் சுட்டுக் கொண்ட அந்நாடு, பின்னர் பிற தரப்புகளுடன் சேர்ந்து புலிகளை அழிப்பதில் வெற்றி கண்டது.
புலிகள் முன்னரே எதிர்வு கூறியபடி சாதாரண ஒரு சட்டம் மூலமே 13 ஆம் திருத்தத்தின் கீழான மாகாண சபைகள் அனைத்து மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழந்து, ஐந்து வருடங்களாக நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வந்து விட்டது.
அதைக் கூட சீர்செய்ய வக்கற்றுக் கையை விரித்திருக்கும் இந்தியா, இப்போது தமிழர் ஒற்றுமையின்மை மீது சாட்டைச் சுமத்தி நழுவப் பார்க்கின்றது.
தமிழ்ப் போராளிகள் தங்களுக்குள் ஆயுதமுனையில் நேரடியாக மோதி யுத்தம் புரிந்து கொண்டிருக்கையில், அந்த யுத்தத்துக்கு மத்தியில் இடையில் புகுந்து தனது நலனில் அடிப்படையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் செய்து, அதைத் தமிழர் தேசத்தின் மீதும் வல்வந்தமாகத் திணித்த புதுடில்லி, இப்போது அதன் நடைமுறையாக்கத்தைச் செயற்படுத்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையீனமே காரணம் என்ற சாக்கில் கயிறு விடுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவரின் கருத்தில் மேற்கண்ட தொனி தென்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்படாவிட்டால், திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழியில்லை என்று தமிழ்த் தரப்புக்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தன.
முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தத் திட்டமிடப்படுகின்றது, திருகோணமலையில் மெகா சிட்டி திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளை உள்ளீர்க்கும் முயற்சி நடக்கின்றது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது, பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களைத் தமிழ்த் தரப்புக்கள், புதிய இந்தியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டின.
“இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சமயத்தில் இந்தியா நிதி உதவி வழங்கியது. தற்போது தேர்தல் நடத்தப் பணமில்லை என்று அரசு கூறுகின்றது. தேர்தலை நடத்த இந்தியா பணம் வழங்கலாம்” – என்றும் தமிழ்க் கட்சிகள் யோசனை முன்வைத்தார்கள்.
இந்தியத் தூதுவர் மேற்படி விடயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அபிவிருத்தித் திட்டங்களுடன், அரசியல் தீர்வையே இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கடலடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மீளிணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா இன்னும் அதிக வகிபாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் வலியுறுத்தின.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றைச் சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்தும் இதை வலியுறுத்தி வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மூடிய அறைக்குள் இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார். இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்” – என்றார்.
“உங்கள் வலியுறுத்தல் மிகவும் கனதியாக இருக்க வேண்டும்” – என்று இதன்போது தமிழ்த் தரப்புக்கள் தெரிவித்தன.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “நீங்கள் (தமிழ்த் தேசியக் கட்சிகள்) ஒற்றுமையாக இருந்தால் இலங்கை அரசுக்கு வலுவாக அழுத்தம் கொடுத்து எந்தவொரு தீர்வையும் நீங்களாகவே பெற்றுக்கொள்ள முடியும். எனவே, உங்களுக்கிடையில் ஒற்றுமை மிகவும் அவசியம்.” – என்றார்.
நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு 5.45 மணியளவில் முடிவடைந்தது.