புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மஹாகும்புக்கடவல, செம்புக்குளிய பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
செம்புக்குளிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
காணித் தகராறு காரணமாகவே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார் என்று கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மஹாகும்புக்கடவல பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மஹாகும்புக்கடவல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாயா ரஞ்சன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (08) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.