வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், மத வழிபாட்டை உறுதி செய்யுமாறு கோரியும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குப் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்கள் சபை நடுவே வந்து, பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபை நடுவே வந்து இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள், “நிறுத்து நிறுத்து இனவாதத்தை நிறுத்து”, “நிறுத்து நிறுத்து மதவாதத்தை நிறுத்து”, “பொலிஸ் அராஜகம் ஒழிக”, “தொல்பொருள் திணைக்களத்தின் அராஜகம் ஒழிக”, “பொய் வழக்கை வாபஸ் பெறு”, “விடுதலை செய் விடுதலை செய் கைதான அப்பாவிகள் 8 பேரையும் விடுதலை செய்”, “தொல்பொருள் அமைச்சரே பதவி விலகு”, “வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து”, “குருந்தூர்மலை எங்கள் சொத்து”, “மயிலத்தமடு எங்கள் சொத்து” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது, “வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார்.
“கைதான 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” – என்று நீதி அமைச்சரிடம் தெரிவித்த தமிழ் எம்.பிக்கள், போராட்டத்தையும் நிறுத்துக்கொண்டனர்.