பாதுக்கை – அங்கமுவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின்போது விமானப் படையின் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் விமானப் படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்களைப் பொலிஸாருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் வழங்குமாறு அவர் ஆலோனை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவர், விமானப் படையின் ரக்பி குழுவில் சேவையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஹொரணையில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேகநபர் விடுமுறையில் இருந்தபோது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் பாதுக்கை – மீரியகல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது அங்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேநபரை, வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
அதனைப் பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.
இதன்பின்னர் பொலிஸாருக்கும் சந்தேநபருக்கும் இடையில் பரஸ்பரத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த சந்தேகநபர், பாதுக்கை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஹொரணை – மொரகஹஹேன பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 2 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியே இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.