புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்முனை என்பது தமிழரின் தாயகம்! – கோடீஸ்வரன் சூளுரை

கல்முனை என்பது தமிழரின் தாயகம்! – கோடீஸ்வரன் சூளுரை

1 minutes read
“கல்முனை என்பது தமிழர்களின் தாயகம், தமிழர்களின் அடையாளம். அதனை யாரும் மறந்துவிட முடியாது. நீங்கள் மறக்கவும் கூடாது.”

– இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், நற்பிட்டிமுனையில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

“கல்முனையில் எமது நிலத்தை இழந்தால் எமது அடையாளமே போய்விடும். யாருக்காகவும் அதனை விட்டுக்கொடுக்ககூடாது. பறிகொடுத்தால் அடையாளம் பறிபோய்விடும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கான சீருடை வழங்கும் நிகழ்வு விளையாட்டுக் கழகத் தலைவர் ஐ.கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கோடீஸ்வரன் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“பிரதேச செயலகம் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமையாக இருக்கின்றது. எமது அடையாளத்தைப் பாதுகாப்பதில் இடம் முக்கியமானது.

எமக்கான அடையாளம் இருக்க வேண்டுமாக இருந்தால் எமது இடம் பறிபோகக் கூடாது. இதை விட்டால் நாளை கல்முனையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும்.

30, 40 வருடங்களுக்கு முன் தள்ளிப் பார்ப்போமானால்கல்முனைப்  பிரதேசம் எல்லாம் தமிழர்களின் பிரதேசமாக இருந்தது. கல்முனைக்குடி என்று அன்று இருந்தது. இன்று கல்முனையாக மாறி இருக்கின்றது. இவையெல்லாம் எமக்கு எதிரான திட்டமிட்ட சூழ்ச்சிகள்.

உண்மையில் கல்முனை வடக்கு  பிரதேச செயலகம் தொடர்பாக முதன்முதலாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவன் நான்தான். ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடரிலே பிரச்சினையை முன்வைத்தவனும் நானே. இதை யாரும் மறுக்க முடியாது.

வெகுவிரைவில் இது விடயம் தொடர்பாக ஜனாதிபதியோடும் பிரதமரோடும் நாங்கள் பேச இருக்கின்றோம். நிபந்தனையோடு எமது ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எமது பிரதேச செயலகத்துக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் தர வேண்டும் என்று நாங்கள் நிபந்தனை விதிக்க இருக்கின்றோம். அதுமாத்திரமல்ல ஏலவே ஆளணியின்படி கணக்காளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. திட்டமிட்ட சதி நடக்கின்றது. அதனால் அது இழுபடுகின்றது.

அந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் நாங்கள் ஒன்றாகி முறியடிக்க வேண்டும். அதற்காக உங்களது ஒத்துழைப்பும் தேவை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More