– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்முடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் குறித்து பேசிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடமும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடமும் தெரிவித்தார்.
திருகோணமலை, மூதூர் – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள், அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார் என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
சுகவீனம் காரணமாக இரண்டு, மூன்று நாள்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்த மனோ கணேசன் எம்.பி. இன்று (15) சற்று குணம் அடைந்த நிலையில், இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்தார்.
அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்தார்.
“உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை.” – என்றும் மனோவிடம் ஜனாதிபதி கூறினார்.
“இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அதற்கான காலம் இதுதான். “தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது” – என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.” – என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார்.
அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்வாரா என்பது தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஆயினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.