செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசின் தலைவராகப் பணியாற்ற ஆணை தாருங்கள்! – சிறீதரன் கோரிக்கை

தமிழரசின் தலைவராகப் பணியாற்ற ஆணை தாருங்கள்! – சிறீதரன் கோரிக்கை

4 minutes read
“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், அவர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அடைகின்ற வகையிலும், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைத்தும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு தேசியத் தலைவர் பிரபாகரனால் வழிகாட்டப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக்  கொள்கையை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு எங்கள் மக்களுக்கான பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

எமது மக்களுக்கான இந்தப் பயணத்திலே தேர்தல்கள் ஒரு பெரிய முக்கிய புள்ளிகளாக மாறுகின்றன. அந்த முக்கியமான புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களுடைய ஆணை திரும்பத் திரும்ப வழங்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்பது தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை, தங்களுக்கான அரசியல் உரிமையை, தங்களுக்கான அரசியல் இருப்பைத் தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு தேர்தல் களமாக – அதற்காக தாங்கள் தெரிவு செய்கின்ற ஆணை வழங்குகின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது.

அந்தவகையில்தான் தமிழ் மக்கள் கூருணர்வோடும் தெளிவான பார்வையோடும் இந்த அரசியல் பெருவெளியில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், நாங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யார் யாரைத்  தெரிவு செய்ய வேண்டும், யார் யார் நாடாளுமன்றம் சென்றால் எங்களுக்காக பேசுவார்கள், எங்களினுடைய மக்களின் உரிமைகளை கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் உங்களுடைய தெரிவுகள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலுக்கான நீதிபதிகளாக தமிழர்களே அமைவதால் அவர்களுடைய வாக்குகள் சிதறிப் போகாமல் அது தமிழ்த் தேசியத்துக்கான தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றவர்களுக்கான வாக்காக மாற வேண்டும்.

இப்போது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 44 தரப்புகளாக 396 பேர் 6 ஆசனங்களுக்காக களத்திலே இருக்கின்றார்கள். ஆகவே, தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. எங்கள் மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. மக்களுடைய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் கேட்பது வடக்கு, கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழுகின்ற தமிழர்கள் தமிழ்த் தேசியத்துக்காகத் தமிழர்களுடைய உரிமைக்காக யார் யார் உரத்துக் குரல் கொடுக்கின்றார்களோ, யார் யார் தேவையென்று கருதுகின்றீர்களோ, அந்தவகையில் தமிழ்த் தேசியத்துக்காக உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோளாகும்.

நான் மதுபானசாலைக்குப் சிபாரிசு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து எனக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது கூட்டுச் சதியாகும். எங்களது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், கிழக்கிலே இருக்கின்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து எனக்கு எதிராகத் திட்டமிட்ட கூட்டுச்சதியாகவே இந்த விடயத்தைக்  கையாளுகின்றார்கள்.

இந்தக் கூட்டுச் சதி மக்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். மக்கள் அதைப் புரிந்துகொள்கின்றார்கள். யாராவது கூடுதலாக விருப்பு வாக்குகளை எடுத்து விடுவார்கள் அல்லது கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கு அவருக்கு ஓர் ஆணையை மக்கள் வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் கட்சிக்குள் இருக்கின்ற சில அநாமதேயமான சந்தேகப் பிறவிகளுடைய அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

எங்கள் மீது மதுபானசாலை இருப்பதாகக் குறிப்பிடும் இவர்கள் தங்களுடைய படத்துடன் என்னுடைய படத்தை இணைத்து கிளிநொச்சிக்குத் தபாலில் அனுப்புகின்றார்கள். நீங்கள் அவருக்கும் (எனக்கும்) போடுங்கோ, எங்கள் இருவருக்கும் போடுங்கோ என்று. இது ஒரு கேவலமான செயல் இல்லையா? மதுபானசாலை இருக்கு என்று கூறிக்கொண்டு எங்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்கும் போக்கிலித்தனத்துக்கு ஏன் போகின்றீர்கள்? என்னுடைய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடு கீழ்த்தரமான செயற்பாடாகும். வரலாறும் காலமும் இதற்குச்  சரியான பதிலை வழங்கும்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் போட்டு தடுக்காது இருந்திருந்தால் எமது கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் 4 – 5 ஆசனங்களை அலுங்கல் – குலுங்கல் இல்லாமல் நாங்கள் எடுத்திருக்க முடியும்.

தங்களுடைய சுயநலத்துக்காகவே எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய பதவி மோகங்களுக்காகத் தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழ் மக்களை வேறு திசைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த கைங்கர்யம்தான் வழக்கு. அதன் காரணமாகத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இடைக்காலத் தடை எப்போது விலக்கப்படுகின்றதோ அப்போது நான் தலைவராகப் பொறுப்பெடுப்பேன்.

அன்புக்குரிய மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது இம்முறை எனக்கு ஒரு ஆணை தாருங்கள். சிறீதரன் ஆகிய நான் திரும்பவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்தி, புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களையும், நிலத்தில் இருக்கின்ற தமிழர்களையும் ஒருங்கிணைத்து வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என்று எங்கள் தமிழர்களை ஓரணியாக ஒன்றாக்கி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் எல்லாக் கட்சிகளையும் ஒரு பாதையில் கொண்டுவந்து, தேசிய விடுதலைக்கான இயக்கத்தை அமைப்பதற்கு என்னாலான முழு முயற்சிகளையும் மற்றவர்களையும் அரவணைத்து நான் செய்வதற்கு எனக்கொரு ஆணை தாருங்கள். மீண்டும் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஆணையாக அது இருக்கட்டும் என எனது மக்களிடம் வினவி நிற்கின்றேன்.

தேர்தல் முடிந்த பிற்பாடு நான் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைப்  பொறுப்பெடுப்பேன். வழக்குகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நினைக்கின்றேன். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கின் தவணை. மேலும் தவணைகள் போகும் வாய்ப்பு உள்ளது. இப்போதும் வழக்கைப் போட்டவர்கள் கைவாங்க முடியும். அவ்வாறு செய்தால் கட்சி மீண்டும் நல்ல நிலைக்கு வரும். மக்களிடம் கட்சி மீது நம்பிக்கை வரும். கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கும்போது தமிழ் மக்களுடைய விடங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

தற்போது மக்கள் யாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுகின்ற காலம். யார், யார் என்னென்ன கேவலங்களைச் செய்கின்றார்களோ, யார் யார் மக்களுக்கு எதிரான விரோதமான நடவடிக்கைகளை ஆற்றுகின்றார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குகின்ற காலம் மக்களிடம் வந்திருக்கின்றது. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்ற காலம் போய் மக்கள் நீதிபதிகளாக மாறி இருக்கின்றார்கள். உங்களுடைய நீதிக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி கடந்து 15 ஆம் திகதி வரக் காத்திருக்கின்றோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More