கிளிநொச்சி ஏ – 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டுக் காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரண்டு தலைக்கவசங்களும், ஒரு பயணப் பையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் பயணப் பையில் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகளும், 71 ஆயிரத்து 100 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, நிலாவெளி, இக்பால் நகர், ஜெய்க்கா வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அண்டன் சாந்தன் எனும் இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சசிகரன் சிம்புரதன் எனும் இளைஞருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தால் உயிரிழந்தவர்களது சடலங்களா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
சடலங்கள் நீதிவானின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.