பல்கலைக்கழக முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மாணவர்கள் தெரிவிக்கையில்,
“கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய போது விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மண்டபக் கதவைத் திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார். கதவைப் பூட்டை உடைத்தே திறந்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது
அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
அதேவேளை, புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், கோரிக்கையை ஏற்கத் தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர்.
அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்களை கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் விரும்பிய பாடத்தைத் தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அவற்றை கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதித்துள்ளார்கள்.
மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூதவை சபையோ, பேரவையோ கடந்த 8 மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூதவை சபை மற்றும் பேரவை ஆகியவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.” – என்றனர்.