“அரசமைப்பு விவகாரத்தில் தம்மிடமுள்ள அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் விரும்பியதை எங்களிடம் திணிக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள். அரசு கொண்டுவர யோசிக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற்கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களிடத்தில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை யாழ். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நானே சிவஞானம் அண்ணனிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டிருந்தேன். அதற்குக் காரணம் ஏற்கனவே பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றார்கள்.
எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. அப்படிப்பட்ட நிலையில் அரசு தமக்குத் தான் பெரும்பான்மை இருப்பதாகவும், மக்கள் தங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளதாகவும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கித் திட்டமிட்டக் கருத்துருவாக்கத்தைச் செய்கின்றனர்.
யதார்த்தம் அப்படியல்ல. மாறாக இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு அமோக ஆணையை வழங்கி இருக்கின்றார்கள்.
அரசு கொண்டுவர யோசிக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற்கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களுக்கிடையில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்டவேண்டும்.
தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் இருக்கின்றன. 19 பேர் என்றால் இன்னும் இரண்டாக அதிகரித்தால் மட்டுமே அறுதிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒன்று, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒன்று என அந்த மூன்று தரப்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் அறுதிப் பெரும்பான்மையாகக் காட்டலாம்.
தமிழ் மக்களுடைய ஆணை பெற்ற தரப்புகள் எப்படி நாங்கள் எங்கள் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஒரு புள்ளி சந்திக்கின்றது என்ற வகையில் பேசுகின்றோம். அந்தக் கோணத்தில் மூன்று தரப்புகளும் ஒன்றாக சேரவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு யோசனை இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த கையோடு தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி சம்பந்தமாகக் கேள்வி வந்தது. நாடாளுமன்றக் குழு அந்தக் கட்சியால் நியமிக்கப்பட்ட வகையில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில் சிறீதரனோடு தொடர்பு கொண்டேன்.
ஆனால், அந்த அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைப் பதவியில் உள்ள சிவஞானம் அண்ணைக்கும், செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தில் சிவஞானம் அண்ணன் ஒரு பேட்டியில், உத்தியோகபூர்வமாக தலைவர் அல்லது செயலாளருக்கு அழைப்பிதழ் வரவில்லை. அழைப்பு வந்தால் பரிசீலிக்கத் தயார் என்று சொல்லப்பட்ட இடத்தில் நாங்கள் அவருடன் நேரத்தைக் கேட்டு இன்று இந்த விடயத்தை அவரிடம் பகிர்ந்து இருக்கின்றோம்.
தங்கள் கட்சியிடம் விடயத்தைப் பேசி அடுத்த கட்டமாக ஒரு முடிவை அறிவிப்பதாகச் சிவஞானம் அண்ணன் சொல்லி இருக்கின்றார். நாங்கள் அந்தச் சந்திப்பை விரைவாக மேற்கொள்கின்ற அவசியத்தை அவருக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அந்தவகையிலான எதிர்பார்ப்புடன் தமிழரசுக் கட்சி நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றோம்.
அரசினுடைய போக்கை நாடாளுமன்றத்தில் நடந்து கொள்கின்ற விதத்தைப் பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்துக்கொண்டு ஒருதலைப்பட்சமாகவே நடந்து கொள்ளுகின்றார்கள்.
எண்ணிக்கையை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்போது நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறி சில விடயங்களை அரச தரப்பினர் செய்கின்றார்கள்.
தமிழ் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் மக்களை வழிநடத்தும் பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது. அதில் நாங்கள் தவறக்கூடாது.
அந்த அடிப்படையில் அவசரமாக எங்களிடத்திலேயே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்டி தவறான விடயத்தைத் தடுப்பதற்கான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.” – என்றார்.