தெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்துக்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாத காரணத்தினால் தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் தெங்கு பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்காக பொருத்தமான கொள்கைத் திட்டங்களைத் தயாரிப்பதாகவும், அதுவரை சில குறுகியகால செயற்றிட்டங்களை பின்பற்றி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அவ்வாறே இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தெங்குப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்வதற்காக அதிகளவான நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்வருங்காலத்தில் தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்படாதிருக்க, சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழுள்ள தெங்குப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஊடாக, அதிகளவான தேங்காய் விளைச்சல்களை பெறுவதற்கான ஆராய்ச்சிகள், உள்நாட்டு தேங்காய் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான பயிர்ச்செய்கை முறைகள், அதிக விளைச்சலைத் தரக்கூடிய தென்னை இனங்களை அறிமுகப்படுத்துதல், தெங்குப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் நோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகளை வழங்குதல், தெங்குப் பயிர்ச்செய்கை தொடர்பான கொள்கைத்திட்டங்களைச் சமர்ப்பித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.