1
யாழ். தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்தக் காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தையிட்டி விகாரை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரையை இடிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் அந்தக் கருத்தை நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் இ.முரளிதரன், வடக்கு மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் அவர் அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.