முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றிற்குள் மது போதையில் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 43 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றிற்குள் நேற்று திங்கட்கிழமை (17) மது போதையில் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.