சிரேஷ்ட ஊடகவியலாளர்களான போத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோர் தமது முகநூலில் பதிவிட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற பதிவாளரால் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல அறிவித்தலையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல கிரிஷ் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இருவரும் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
இந்த முகநூல் பதிவு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாக தாம் கருதுவதாக உயர் நீதிமன்ற பதிவாளர் நீதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார்.அதற்கமைய பொருத்தமான உத்தரவை பிறபிக்குமாறு பதிவாளர் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி மஞ்சுல திலகரத்ன குறித்த முகநூல் பதிவுடன்கூடிய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட நீதிபதி அதன்பின்னர் இது தொடர்பில் பொருத்தமான உத்தரவொன்று பிறபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டதையடுத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோர் வௌிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.